அருவியில் காட்டாற்று வெள்ளம் வந்தும் கண்மாய்க்கு தண்ணீர் வரல வரத்து கால்வாய் பராமரிக்காததால் வறண்ட கண்மாய்கள்
பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் 15 நாட்களுக்கும் மேலாக காட்டாற்று வெள்ளம் வந்தும் வரத்து வாய்க்கால் சீரமைக்காததால் பெரியகுளம் நந்தியாபுரம் உள்ளிட்ட 5 கண்மாய்களுக்கு நீர் வரத்து இன்றி வறண்டுள்ளன என விவசாயிகள் புலம்புகின்றனர். மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்திற்கு உட்பட்ட பெரியகுளம் அருகே நந்தியாபுரம் கண்மாய், இதன் அருகே பொட்டைக்குளம் கண்மாய், லக்கியம்பட்டி கண்மாய், பொட்டை வண்ணான் குளம், நெடுங்குளம் கண்மாய் ஆகிய 5 கண்மாய்கள் உள்ளன. 800 ஏக்கர் பரப் பளவு உடைய 5கண்மாய் களுக்கும் கும்பக்கரையிலிருந்து வெளி யேறும் தண்ணீர், வாய்க்கால் வழியாக, இ.புதுக்கோட்டை அருகே நந்தியாபுரம் அணைக்கட்டில் சேகரமாகிறது. அங்கிருந்து பெரிய வாய்க்கால் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் வரவேண்டும். இக் கண்மாய்கள் நீரினை நம்பி வடுகபட்டி, எண்டப்புளி, எ.புதுப்பட்டி, மேல்மங்கலம், பங்களாபட்டி, இ.புதுக்கோட்டை பகுதியில் ஆயிரம் ஏக்கர் நெல், தென்னை, வாழை, கரும்பு விவசாயம் நடக்கிறது. இக் கண்மாய்களை பாம்பாறு வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் கூட்டு முயற்சியால் கடந்த பல ஆண்டுகளாக பராமரித்து முறை வைத்து வாய்க்கால் வழியாக நீரை கொண்டு வந்து நிரப்புவர். கடந்த சில ஆண்டுகளாக வாய்க்கால் பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி நீர் வரத்து இல்லை. கண்மாய்களில் நான்கு ஆண்டுகளுக்கு முன் மீன்பாசி ஏலம் எடுத்தவர் மீன்கள் பெருக்கத்திற்கு கோழி கழிவுகள், இறைச்சி கழிவுகள், ரசாயன பொருட்களை குளத்தில் ஊற்றி நீரை மாசுபடுத்தினர். மேலும் மீன் வளர்ப்போர் வசதிக்கு ஏற்ப தண்ணீரை திறப்பதும், நிறுத்துவதும் என விவசாயத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டனர். இதனால் மீன்பாசி ஏலத்தை ரத்து செய்யக் கோரி சப் கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். மீன் பாசி ஏலம் ரத்து செய்யுங்கள் பாம்பாற்று வாய்க்கால் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் தலைவர் முத்துவேல் கூறுகையில்: ஆயக்கட்டு தாரர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நீர்பாசனத்துறையினர் நந்தியாபுரம் கண்மாய் ரூ.34,500, பொட்டக்குளம் ரூ.24 ஆயிரத்துக்கு ஏலம் விட்டுள்ளனர். பிற கண்மாய்கள் ஏலம் போகவில்லை. மீன் பாசி ஏலத்தால் மீண்டும் கண்மாய் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இரு கண்மாய்கள் ஏலம் விட்ட ரூ.58,500 யை நீர்பாசனத்துறைக்கு நீரினை பயன்படுத்துவோர் சங்கம் வழங்குகிறோம். கண்மாய்களில் யாரும் மீன் வளர்க்க அனுமதி அளிக்க கூடாது. நந்தியாபுரம் அணைக்கட்டில் சேகரமாகும் நீரினை முறைப்பாசனம் வைத்து கண்மாய்களில் தண்ணீரை பங்கிட்டு கொள்வோம் என்றார். வாய்க்கால் சீரமைக்க வேண்டும் பொருளாளர் முரு கேசன் கூறுகையில்: வட கிழக்கு பருவமழை பெய்தும், நீர் வரத்து வாய்க்கால் சீரமைக்காததால் கண்மாய்களில் நீர் வரத்து இல்லை. மீன் பாசி ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என சப்-கலெக்டர் ரஜத்பீடன், நீர் பாசனப் பிரிவு உதவி செயற்பொறியாளரிடம் மனு கொடுத்துள்ளோம். விவசாயம் காக்க மீன்பாசி ஏலம் கைவிட வேண்டும் என்றார்.-