மாவட்டத்தில் மேகமலை புலிகள் காப்பக எல்லையை விரிவுபடுத்துங்கள்; காப்புக்காடுகளில் வன உயிரினங்கள் பாதுகாக்க உதவும்
கம்பம்; வன உயிரினங்களை புலிகளை பாதுகாக்க மேகமலை புலிகள் காப்பகத்தின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி வனக்கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, மேகமலை வன உயிரின சரணாலயம் உருவாக்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் ரோட்டிற்கு கிழக்கு பகுதியில் உள்ள கம்பம் கிழக்கு, சின்னமனூர், மேகமலை, வருஷ நாடு, கண்டமனூர், ஆண்டிபட்டியின் ஒரு பகுதி என வனப்பகுதிகள் கொண்டு வரப்பட்டது. இவை புலிகள் காப்பக துணை இயக்குநர் கட்டுப்பாட்டிலும், மேற்கு பக்கம் உள்ள காப்பு காடுகள் மாவட்ட வன அலுவலர் சுட்டுப்பாட்டில் உள்ளது.மேகமலை சாணாலயத்தை ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்துடன் இணைத்தால் புலிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என கூறி ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவித்தனர்.புலிகள் காப்பகத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொள்கின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பில் புலிகள், யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.இருந்தபோதும் மாவட்டத்தின் மேற்கு பகுதி புலிகள் காப்பகத்திற்குள் வராததால் புலிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. புலிகள் காப்பக பகுதியிலிருந்து, காப்பு காடுகளுக்கு புலிகள் இடம் பெயராது என கூற முடியாது. அவ்வாறு இடம் பெயரும் போது புலிகளின் பாதுகாப்பு எப்படி என்பதும் தெரியாது.மேற்கு பகுதியில் குமுளியில் இருந்து போடி, பெரியகுளம் வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் காப்பு காடுகளாக உள்ளன. இப்பகுதியில் வன உயிரின குற்றங்கள் நடத்தால், காப்பக சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது தெரியவில்லை.சத்தியமங்கலத்தில் இருந்து தேக்கடி வரை புலிகள் காப்பகம் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோல் தேனி மாவட்டத்தில ரோட்டிற்கு மேற்கு வனப்பகுதிகளையும் புலிகள் காப்பகத்துடன் இணைக்க வேண்டும். ரோட்டிற்கு மேற்கு பக்கம் உள்ள காப்பு காடுகளை பாதுகாக்கவும், வன உயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மேகமலை புலிகள் காப்பகத்துடன், காப்பு காடுகளை இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இது குறித்த பரிந்துரை அனுப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான முடிவுகள் அறிவிக்கப்படும். அல்லது ஒரே நிர்வாகத்தின் கீழ் இரு பகுதிகளையும் கொண்டு வர தற்காலிகமாக அறிவிப்பு வெளியாகும்,' என்றனர்.