கையிருப்பில்லை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம்கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்கும் விவசாயிகள்
தேனி: மாவட்டத்தில் பல தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் கையிருப்பு இல்லாததால் விவசாயிகள் கூடுதல் விலைக்கு தனியார் கடைகளில் வாங்கும் நிலை நிலவுகிறது.மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் தேனி மாவட்டத்தில் 116 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 80 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 74 கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு கடன் தொகையில் 10 சதவீதத்திற்கு உரங்கள் வழங்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களுக்கு அரசின் டான்பெட் நிறுவனம் மூலம் உரங்கள் விற்பனைக்கு வழங்கப்படுகிறது.தனியார் கடைகளை விட கூட்டுறவுச்சங்கங்களில் விற்பனை செய்யப்படும் உரங்கள் மூடைக்கு ரூ.30 வரை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கங்களில் விரும்பி வாங்குகின்றனர். அனைத்து பயிர்களுக்கும் யூரியா அத்தியாவசியாக உள்ளது. சங்கங்களில் 45 கிலோ யூரியா உர மூடை ரூ. 267 க்கு விற்கப்படுகிறது. ஆனால் வெளி மார்கெட்டில் ரூ.300க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் சில தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உரங்கள் கையிருப்பு இல்லை என விவசாயிகளை திருப்பி அனுப்புகின்றனர். குறிப்பாக மயிலாடும்பாறை, சுப்புலாபுரம், உப்பார்பட்டி, போடி, தேவாரம், எரசக்கநாயக்கனுார், கன்னிசேர்வைபட்டி, தேவதானப்பட்டி,கொத்தப்பட்டி உள்ளிட்ட கூட்டுறவுச்சங்களில் யூரியா உரம் கையிருப்பு இல்லை. இதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் கூடுதல் விலைக்கு தனியாரிடம் வாங்கும் அவல நிலை நீடிக்கிறது.இதுபற்றி கூட்டுறவு சங்க செயலாளர்கள் கூறுகையில், 'டான் பெட் நிறுவனத்தில் இருந்து சங்கங்களுக்கு உர மூடைகள் வழங்கப்படுகிறது. இதற்கான தொகையை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். ஆனால், விவசாய சீசன் இல்லாத நாட்களில் உரங்கள் விற்பனை மந்தமாக இருக்கும். அப்போது உர மூடைகள் ஒரு மாதத்திற்கு சங்கங்களில் இருப்பு இருக்கும். அந்த நாட்களில் உரத்திற்கான தொகையை கூட்டுறவு சங்கங்களில் இருந்து பணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இதனால் நலிவடைந்த கூட்டுறவு சங்கங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. இந்த காரணங்களால் சில சங்கங்கள் உரம் வாங்குவதை தவிர்த்து விட்டனர். இதனால் அப் பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.எனவே உரம் விற்பனை செய்து அதற்கான தொகையை டான்பெட்டிற்கு செலுத்த அனுமதிக்க வேண்டும். உர மூடைகள் சங்கங்களுக்கு கொண்டு வரும் செலவு, இறக்கு கூலி உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் பெரிய அளவில் சங்கத்திற்கு லாபம் இல்லை. உர விற்பனையில் சங்கத்திற்கு லாபம் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் ஆர்வமாக கொள்முதல் செய்வார்கள் என்றனர்.