தென்னையை மீண்டும் வேளாண் பயிராக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை
கம்பம்: தென்னையை மீண்டும் வேளாண் பயிராக அறிவித்து சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் காய்கறி பயிர்கள், வாழை, திராட்சை, தென்னை போன்றவைகள் இறவை பாசனத்திலும், நெல் முல்லைப் பெரியாறு பாசனத்திலும், பயறு வகைகள் மானாவாரியிலும் சாகுபடியாகிறது.மாவட்டத்தில் தென்னை 20 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தென்னையில் ஒவ்வொரு பாகமும் வருவாயை தருவதாலும், நீண்ட கால வருவாய்க்கு உத்தரவாதம் அளிப்பதாலும் தென்னையை விரும்பி சாகுபடி செய்கின்றனர்.தென்னை வேளாண் துறை பயிராக இருந்தது. கடந்தாண்டு தோட்டக்கலை பயிராக மாற்றி விட்டனர். தோட்டக்கலைத் துறையினருக்கு காய்கறி பயிர்கள், வாழை, திராட்சை , மா , கொய்யா, புளி போன்ற பழப் பயிர்கள், காபி, தேயிலை, ஏலக்காய் என வாசனை திரவிய பயிர்களும் உள்ளன.வேளாண் துறைக்கு நெல் மற்றும் மானாவாரி பயிர்கள் மட்டுமே உள்ளன. தென்னை சாகுபடி பரப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தென்னை விவசாயிகள் கூறுகையில், தென்னைக்கு மானியங்கள், திட்டங்கள் ஏதும் மாநில அரசு தருவதில்லை. தென்னை வளர்ச்சி வாரியமே பல திட்டங்களை செயல்படுத்துகிறது.கொப்பரை கொள்முதல் மட்டும் மாநில அரசு செய்கிறது. நோய் தாக்குதல், விலை குறைவு, பராமரிப்பு செலவு அதிகரித்தல் என சிக்கல்கள் அதிகரித்து வருகிறது .எனவே தென்னைப் பயிருக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தோட்டக்கலைத் துறையினருக்கு ஏற்கெனவே பயிர்கள் அதிகம் இருப்பதால் , தென்னையை மீண்டும் வேளாண் பயிராக அறிவிக்க அரசு உத்தரவிட வேண்டும். மேலும் தென்னை சாகுபடிக்கு அரசு முக்கியத்வம் வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.