உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எதிர்பார்த்த பருவ மழையின்றி மானாவாரி விவசாயிகள்...ஏமாற்றம்: பல நுாறு ஏக்கரில் முளைத்த பயிர்கள் காய்ந்து வரும் பரிதாபம்

எதிர்பார்த்த பருவ மழையின்றி மானாவாரி விவசாயிகள்...ஏமாற்றம்: பல நுாறு ஏக்கரில் முளைத்த பயிர்கள் காய்ந்து வரும் பரிதாபம்

ஆண்டிபட்டி:தேனி மாவட்டத்தில் மானாவாரி விவசாயத்திற்கு தேவையான பருவ மழை இந்த ஆண்டு பெய்யாததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மழையை நம்பி நுாற்றுக்கணக்கான ஏக்கரில் விதைப்பு செய்த பயிர்கள் முளைத்துள்ள நிலையில் மழையின்றி காய்ந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் தென்மேற்கு பருவமழை கிடைக்கும். கோடை உழவுக்கு பின் உரமேற்றிய நிலங்களில் விவசாயிகள் கிடைத்த மழையை பயன்படுத்தி மானாவரியாக சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், துவரை, மொச்சை, தட்டை, பாசி, உளுந்து, கொள்ளு போன்ற பயறு வகைகள், நிலக்கடலை, எள், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களை விதைப்பு செய்து விடுவர்.முளைத்த பயிர்கள் சில மாதங்களில் வளர்ந்து விடும். அதனை தொடர்ந்து அக்டோபர், நவம்பர், டிசம்பரில் கிடைக்கும் வட கிழக்குப் பருவமழையில் பயிர் விளைச்சலை ஜனவரியில் அறுவடை செய்வர். நடப்பு ஆண்டில் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, பெரியகுளம், தேனி பகுதிகளில் மானாவாரி விவசாயம் கடுமையாக பாதித்துள்ளது. துவக்கத்தில் பெய்த மழையை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் விதைப்பு செய்தனர். முளைத்த பயிர்கள் தொடர் மழை இல்லாததால் தற்போது காய்ந்து வருகிறது. மழை ஏமாற்றியதால் பல ஏக்கரில் விவசாயிகள் விவசாயிகள் விதைப்பை துவக்க வில்லை.

வளர்ந்த பயிர்கள் விளைச்சல் தருமா

வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 9 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு மழை குறைவால் மானாவாரி விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவை விதைப்பு செய்யப்படும். நடப்பு பருவத்தில் விதைப்புக்காக நிலக்கடலை 8 டன், சிறுதானியங்கள் 6 டன், பயறு வகைகள் 4 டன் அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல விவசாயிகள் விதைப்பை தவிர்த்துள்ளனர்.தற்போது வளர்ந்துள்ள பயிர்களும் முழு அளவில் விளைச்சலை கொடுக்குமா என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு, வைகை ஆறு, சோத்துப்பாறை, வராக நதி, மஞ்சாளாறு ஆகியவை மூலம் நேரடி பாசன வசதி பெரும் நிலங்களில் பாதிப்பின்றி விவசாயம் தொடர்கிறது.நிலத்தடி நீர் குறைவால் கிணறுகள், போர்வெல் மூலம் நடைபெறும் இறவை பாசன பரப்பும் குறைந்துள்ளது. மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு இந்த ஆண்டு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்