போடியில் இருந்து அகமலைக்கு பஸ் வசதி இன்றி விவசாயிகள் சிரமம்
போடி: போடி ஒன்றியம், அகமலை ஊராட்சியில் கண்ணக்கரை, அகமலை, அண்ணா நகர், சொக்கன் அலை, பனங்கோடை, ஊரடி, ஊத்துக்காடு, குண்டேரி, கானக மிஞ்சி, மருதனூர், பட்டூர் உட்பட பல மலை கிராமங்கள் அடங்கி உள்ளன. அகமலை, அண்ணாநகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காப்பி, பலா, எலுமிச்சை, ஆரஞ்சு, ஏலம் போன்ற பயிர்கள் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு உள்ளன. போடியில் இருந்து அகமலைக்கு நேரடி பஸ் வசதி இல்லாததினால் பெரியகுளம் சென்று அகமலைக்கு செல்ல வேண்டியது உள்ளது. அகமலைக்கு போதிய ரோடு வசதி இல்லாததால் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் இருந்து கண்ணக்கரை வரை பஸ்சில் சென்று அங்கிருந்து ஜீப்புகளிலும், நடந்து அகமலை செல்ல வேண்டியது உள்ளது.ஜீப்பிற்காக நீண்ட நேரம் காத்திருப்பதன் மூலம் விவசாயிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர். போடியில் இருந்து நேரடியாக பஸ் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.