உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தாததால் விவசாயிகள்... அதிருப்தி: தீவன விலை உயர்வால் கால்நடை வளர்ப்பு முடங்கும் அபாயம்

அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தாததால் விவசாயிகள்... அதிருப்தி: தீவன விலை உயர்வால் கால்நடை வளர்ப்பு முடங்கும் அபாயம்

ஆண்டிபட்டி: ''மாவட்டத்தில் பசுந்தீவனத்திற்கான சீசன் துவங்கிய நிலையில் தீவன விலையும், பாலின் கொள்முதல் விலையை அரசு குறைத்துள்ளதால் கறவை மாடுகள் வளர்ப்பில் விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்துள்ளது. இதனை ஆய்வு செய்து கால்நடை வளர்ப்பில் முக்கிய அங்கமாக உள்ள கறவை மாடு வளர்ப்பை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.'' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் கூடலுார் முதல் தேனி வரை ஆண்டு முழுவதும் சாகுபடி பணிகள் தொடர்கிறது. போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறு, பெரியகுளம் வராக நதி ஆகியவற்றில் குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே நீர்வரத்து கிடைப்பதால் கோடை காலத்தில் விவசாயத்தை தொடர முடியாத நிலை உள்ளது. ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, பெரியகுளம், போடி பகுதிகளில் விவசாயிகள் வருமானத்திற்காக கறவை மாடுகள் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர். தீவன விலை உயர்வு: கறவை மாடு வளர்ப்போர் கூறியதாவது: பருவ மழை சீசன் தொடங்கியதும், கறவை மாடுகளின் தேவை அதிகரிக்கும். பலரும் கறவை மாடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். கறவை மாடு ஒன்றின் விலை ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உள்ளது. தினமும் தீவனச் செலவு ரூ.200 வரை ஆகிறது. ஒரு மாட்டிற்கு இரு நாட்களுக்கான வைக்கோல் கட்டு தற்போது ரூ.330 வரை உயர்ந்துள்ளது. பாசிப்பயறு டஸ்ட், கம்பு, மக்காச்சோள மாவு, குச்சி, கடலைப் புண்ணாக்கு இவைகளை பசுந்தீவனத்துடன் கலந்து தர வேண்டும். கறவை மாடுகள் தினமும் 15 லிட்டர் வரை பால் கொடுத்தால் மட்டுமே கட்டுபடியாகும். ஜெர்சி ரக மாடுகள் அதிகபால் தரும். மழைக் காலங்களில் இவைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். இதனால் செலவு அதிகமாகும். நாட்டு மாடுகளில் தினமும் 5 லிட்டர் அளவில் தான் பால் சுரக்கும். தற்போது பால் விலை உள்ளூர் பண்ணைகளில் லிட்டர் ரூ.32 வரை நிர்ணயம் செய்கின்றனர். ஆவின் தனியார் குளிரூட்டும் மையங்களில் பால் அடர்த்திக்கு ஏற்ற வகையில் ரூ.29 முதல் ரூ.35 வரை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பால் வியாபாரிகள் லிட்டர் ரூ.45 முதல் 50 வரை விலை வைத்து விற்கின்றனர். மாடு வளர்ப்பவர்கள் அனைவரும் நேரடியாக பால் வியாபாரம் செய்யும் வாய்ப்பு இல்லை. இதனால் கறவை மாடுகள் வளர்ப்பை பலரும் தவிர்க்கின்றனர்., என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !