தக்காளி விளைச்சல், விலை குறைவால் விவசாயிகள் கவலை
ஆண்டிபட்டி: விளைச்சல் குறைந்து விலையும் குறைவதால் ஆண்டிபட்டியில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர். ஆண்டிபட்டி பகுதியில் புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி, மூனாண்டிபட்டி, புதூர், குண்டலப்பட்டி, அணைக்கரைப்பட்டி, அரப்படித்தேவன்பட்டி, குன்னூர், பாலக்கோம்பை, ராயவேலூர், அழகாபுரி உட்பட பல கிராமங்களில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்கின்றனர். இப்பகுதியில் விளையும் தக்காளி ஆண்டிபட்டி மார்க்கெட்டிலிருந்து மதுரை, சென்னை உட்பட வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து குறைகிறது. அடுத்தடுத்து பெய்யும் மழையால் தக்காளி விளைச்சல் பாதித்துள்ளது. வரத்து குறைந்துள்ள நிலையில் விலையும் குறைவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வியாபாரிகள் கூறியதாவது: சீசன் காலங்களில் ஆண்டிபட்டி மார்க்கெட்டிற்கு தினமும் 20 டன் வரை தக்காளி வரத்து இருக்கும். தற்போது தினமும் 3 முதல் 4 டன் அளவிலான வரத்து மட்டுமே உள்ளது. கடந்த சில நாட்களில் 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.400 விலையில் இருந்தது. தற்போது 15 கிலோ பெட்டி ரூ.150 வரை குறைந்துள்ளது. ஆந்திராவில் இருந்து வரும் தக்காளி 30 கிலோ கொண்ட பெட்டி ரூ.300 முதல் 350 வரை உள்ளது. முகூர்த்த சீசன் இல்லாததால் தக்காளி தேவையும் குறைந்துள்ளது. விலை குறைவு தக்காளி சாகுபடி விவசாயி களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்ற னர்.