மழை பெய்யும் போதெல்லாம் மூழ்கும் தீயணைப்பு நிலையம்
தேனி: தேனியில் மழை பெய்தால் தீயணைப்பு நிலையம் குளமாகிறது, தேங்கும் தண்ணீரை வெளியேற்ற வழியின்றி தீயணைப்பு வீரர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.தேனி பெரியகுளம் ரோட்டில் நகராட்சி அலுவலகம் அருகில் தீயணைப்பு அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் மெயின் ரேட்டில் இருந்து 3 அடி பள்ளத்தில் அமைந்துள்ளது. அருகில் ஒடைத்தெருவில் இருந்து வரும் சாக்கடை ஓடுகிறது. மழை நேரத்தில் ஓடையில் பிளாஸ்டிக், குப்பையினால் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் அலுவலகத்திற்குள் கழிவுநீருடன், மழைநீர் தேங்குகிறது. அலுவலகத்தில் முழங்கால் தண்ணீர் தேங்குகிறது. நேற்று முன்தினம் நகர் பகுதியில் மதியம் 3:00 மணியளவில் மழை பெய்தது. ஆனால், தீயணைப்பு நிலையத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற இரவு 9:30 மணியானது. தீயணைப்பு நிலையத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அருகே நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.