உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு உயர்கிறது வைகை அணை நீர்மட்டம்

மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு உயர்கிறது வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிபட்டி,:தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணைக்கு வரும் அதிகப்படியான நீர் வரத்தால் நீர்மட்டம் வேகமாக உயர்கிறது. வருஷநாடு மலைப்பகுதியில் சில நாட்களாக பெய்யும் மழையால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து தொடர்கிறது. வருஷநாடு மலைப்பகுதியில் மழைக்காலத்தில் உற்பத்தியாகும் பல சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து வாலிப்பாறை அருகே மூல வைகை ஆறாக வாலிப்பாறை, தும்மக்குண்டு, முருக்கோடை, வருஷநாடு, கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், கண்டமனூர், அம்மச்சியாபுரம் வழியாக வைகை அணைக்கு செல்கிறது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறுகளில் இருந்து வரும் நீரும் தேனி பழனிசெட்டிபட்டி வழியாக வைகை அணை சேர்கிறது. நேற்று காலை 7:00 மணிக்கு வைகை அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 28 ஆயிரத்து 130 கன அடியாக இருந்தது. மதியம் 12:00 மணிக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 5 கன அடியாகவும், மதியம் 1:00 மணிக்கு 15 ஆயிரத்து 145 கன அடியாகவும் குறைந்தது. நேற்று காலை 62.66 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் மதியம் 1:00 மணிக்கு 64.40 அடியாக உயர்ந்தது. அணை உயரம் 71 அடி. வைகை அணை நீர்மட்டம் விரைந்து உயர்வதால் அணையில் இருந்து எந்நேரமும் கூடுதல் நீர் திறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க நீர்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சின்னச்சுருளி அருவியில் குளிக்க தடை : வருஷநாடு மலைப்பகுதியில் பெய்த மழையால் சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறையில் சின்னச்சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி விவசாயி பலி ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் 49. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ராக்காச்சி அம்மன் கோயில் பகுதியில் இவருக்கு விவசாய தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு தோப்பில் பணி முடிந்து சகோதரர்கள் பாலகிருஷ்ணன், மகாதேவனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். டூவீலரை ராமச்சந்திரன் ஓட்டிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் அணைத்தலை ஆற்று தரைப்பாலத்தில் நீர் வரத்து அதிகரித்திருந்தது. வெள்ளம் அதிகமாவதற்கு முன் பாலத்தை கடந்து சென்று விடலாம் என கடந்த போது காட்டாற்று வெள்ளத்தில் ராமச்சந்திரன் அடித்துச்செல்லப்பட்டார். சகோதரர்கள் தப்பினர். தீயணைப்பு துறையினர் மழை தொடர்ந்ததால் மீட்பு பணிகளை நேற்று காலை துவங்கினர். தீவிர தேடுதலுக்கு பின் மதியம் 12:45 மணிக்கு புதரில் சிக்கியிருந்த ராமச்சந்திரன் உடலை மீட்டனர். மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ