தொடுதிரை, கேமரா வசதியுடன் அரசு பஸ் சோதனை முறையில் இயக்கம்
தேனி: தேனியில் இருந்து மதுரைக்கு கேமரா, தொடுதிரை (ஆன்ட்ராய்டு டிஸ்பிளே) வசதியுடன் அரசு பஸ் சோதனை முறையில் இயக்கப்படுகிறது.தமிழக அரசு சார்பில் மாவட்டங்களுக்கு இடையே இயக்க புதிய அரசு பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. சில பஸ்களில் தொடுதிரை (ஆன்ராய்ட் டிஸ்பிளே), ஜி.பி.எஸ்., பின் பகுதியில் கேமரா, சென்சார் வைக்கப்பட்டு உள்ளன. பஸ்சை 'ரிவல்ர்ஸ்' எடுக்கும் போது மனிதர்கள், ஏதேனும் பொருட்கள் இருந்தால் பஸ்சின் உள்பகுதியில் ஒலி எழுப்பும், கேமரா உடன் இணைக்கப்பட்ட திரை டிரைவர் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 'டிஸ்பிளே'வில் மைக், தொடர்பு சாதனங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. அவசர காலங்களில் அந்த கருவியில் உள்ள பட்டனை அழுத்தினால் மதுரை, சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையங்களுடன் தொடர்பு கொள்ள இயலும். மேலும் மாநகர பஸ்களில் உள்ளது போன்று பஸ் நிறுத்தம் வருவதற்கு 200 மீ., முன்னதாக அறிவிப்பு, பஸ்சின் உள்ள பகுதியில் உள்ள திரையில் காட்டுவது போன்ற வசதிகள் உள்ளன.தேனி பஸ் டெப்போ அதிகாரிகள் கூறுகையில் 'திண்டுக்கல் மண்டலத்திற்கு ஒரு பஸ் ஒதுக்கி உள்ளனர். இது தேனி முதல் மதுரை வரை சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகிறது' என்றார்.