தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்க்க ஏற்பாடு :களம் காணும் பசுமை இயக்கங்கள்
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உத்தமபாளையத்தில் நன்செய் அறக்கட்டளை, ராயப்பன்பட்டியில் ஆலிலை பசுமை இயக்கம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணிகளை முன்னெடுத்து பொது மக்களுக்கு வழிகாட்டிகளாக உள்ளன. கம்பத்தில் வரதராஜபுரம், பெண்கள் மேல்நிலைப் பள்ளி தெரு, பார்க் வீதி, நாட்டுக்கல், ஏகலுாத்து ரோடு, சி.எம்.எஸ்., நகர், கம்பமெட்டு ரோடு, கிராமச் சாவடி தெரு, மெயின் ரோடு, கொண்டித்தொழு வீதி என, பெரும்பாலான வீதிகளில் பெயருக்கு கூட மரங்கள் இல்லை. இந்த பகுதிகளில் மரக் கன்றுகளை நடவு செய்ய ஆலிலை பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. காந்தி நகர், நந்தகோபாலசாமி நகர், யாழினி நகர் என, விரிவாக்கப் பகுதிகளிலும் பெயருக்கு மரங்கள் உள்ளது. அதுவும் குறைவாகவே உள்ளன. அனைத்து வீதிகளிலும் மரங்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரப்ப நாயக்கன்குளத்தின் கரைகளில் மரங்கள் வளர்க்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் அறுவடை இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை நடந்த சுருளிப்பட்டி ரோடு, காமயகவுண்டன்பட்டி ரோடு வயல்களில், கழிவுகளை தீ வைத்து எரித்தனர். இதனை தவிர்க்க ஆலிலை பசுமை இயக்கம் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது. 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு மணிமாறன், ஆலிலை பசுமை இயக்கம்: எங்கள் அமைப்பின் சார்பில் இதுவரை 75 ஆயிரம் மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் நடவு செய்துள்ளோம். கலெக்டர் அலுவலக வளாகம், உத்தமபாளையம் கல்லுாரிகளில் குறுங்காடு அமைத்துள்ளோம். குறுங்காடு அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கான நல்ல சூழ்நிலை ஏற்படுகிறது. பறவைகள் விரும்பி உண்ணும் நாவல், அத்தி, கொடிக்கா புளி போன்றவற்றை நடவு செய்து வருகிறோம். பறவைகள் தங்கள் எச்சத்தின் மூலம் பல மரக்கன்றுகளை உருவாக்கும். குறுங்காடுகள் பறவைகள் இன உற்பத்திற்கு உதவியாக இருக்கும். எனவே கம்பம் நகர் அல்லது நகரை ஒட்டிய பகுதிகளில் குறுங்காடு அமைக்க முயற்சிகள் செய்து வருகிறோம். நகராட்சி முன்வந்து இடம் தந்தால் கம்பத்தை பசுமை போர்வைக்குள் கொண்டு வரலாம். இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன., என்றார். தரிசு நிலங்களில் மரநடவுப் பணி கணேசன், ஆலிலை பசுமை இயக்கம் : எங்கள் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் நடக்கும் விசேஷங்களில் பங்கேற்பவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம். மரங்கன்றுகள் நடவு செய்து வளர்ப்பில் ஈடுபடும் பொது மக்களிடம் மாணவ குழுக்கள் மூலம் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது கோகிலாபுரம் கண்மாய் கரையில் குறுங்காடு ஏற்படுத்தி, பராமித்து வருகின்றோம். பல்லுயிர் பெருக்கம் ஏற்பட குறுங்காடுகள் உதவும். எனவே இங்கு மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டு அடர் வனம் அமைக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்படும். அனைத்து பள்ளி வளாகங்களிலும் மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகள் உள்ளடக்கிய நர்சரி ஒன்றை உருவாக்க அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும்., என்றார்.