ரூ.1.20 கோடியில் ரோடு அமைக்க பூமிபூஜை
போடி: போடி புதுக்காலனி - பரமசிவன் கோயில் வரை ரூ.1.20 கோடி செலவில் ஒரு கி.மீ., தூரம் புதிதாக ரோடு, சிறு பாலங்கள் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.புதுக்காலனி - பரமசிவன் கோயில் வரை ரோடு வசதி இன்றி மண் பாதையாக இருந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். ரோடு வசதி பல ஆண்டுகளாக கோரினர். பாதை குறுகலாக இருந்தால் நகராட்சி ரோடு வசதி செய்து தர முடியாத நிலை ஏற்பட்டது. ரோட்டிற்காக பாதையின் இருபுறமும் உள்ள மக்கள் நிலங்களை தானமாக வழங்கினார்.இதனையொட்டி புதுக்காலனியில் இருந்து பரமசிவன் கோயில் வரை ஒரு கி.மீ., தூரம் நகராட்சி மூலம் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி செலவில் புதிதாக ரோடு, சிறு பாலங்கள் அமைப்பதற்கான பூமி பூஜை நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. தங்க தமிழ்ச் செல்வன் எம்.பி., பூஜையை துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் பார்கவி, பொறியாளர் குணசேகர், தி.மு.க., நகர செயலாளர் புருஷோத்தமன் உள்பட பலர் பங்கேற்றனர்.