மேலும் செய்திகள்
மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா
31-Dec-2024
உத்தமபாளையம்: மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் துளசி, வடைமாலை சாத்தி சிறப்பு வழிபாடு செய்தனர்.மார்கழி அமாவாசை திதியில் மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்தார். அந்த நாளை அனுமன் ஜெயந்தி என்று கொண்டாடுகின்றோம். அனுமந்தன்பட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று காலை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து கால சாந்தி பூஜை, சகஸ்ரநாம பூஜை, புஷ்பாஞ்சலி நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் பால்குட ஊர்வலம், ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.அனுமன் சந்தனகாப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மூலவர் சன்னதியில் மலர்க் கோலம் போடப்பட்டிருந்தது. கேட்ட வரம் தரும் அனுமனை அவரது பிறந்த தினத்தில் தரிசனம் செய்ய அதிகாலை முதல் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களுக்கு துளசி மாலை, வாழைப்பழம், வடை, கேசரி, சர்க்கரை பொங்கல், குங்குமம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயில், காளாத்தீஸ்வரர் கோயில், கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில், சின்னமனூர் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆண்டிபட்டி : ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடந்தது. எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமை வகித்தார். கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு கலச பூஜைகள் நடந்தது. புனித நீர் கலசத்தை கோயில் வளாகத்தை சுற்றி எடுத்து வந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பால், தயிர், பன்னீர், சந்தனம் உட்பட 12 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு, துளசி மாலை, வடை மாலை சாத்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் செய்தனர். ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி ராஜ அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காட்டி வழிபட்டனர். பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு துளசி, செந்தூரம், லட்டு, வடை, கேசரி, புளியோதரை, பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் கோயில் சார்பில் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
31-Dec-2024