பெரியகுளத்தில் 8 கி.மீ., துாரத்திற்கு நடைபயிற்சி தளம் சுகாதார ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை
தேனி : பெரியகுளத்தில் 8 கி.மீ., துாரத்திற்கு 'நடப்போம் நலம்பெறுவோம்' திட்ட நடைபயிற்சி தளம் அமைக்க நேற்று நடந்த சுகாதார ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் புகையிலை தடுப்பு குழு மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் கலைச்செல்வி, அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் முத்துசித்ரா, டி.எஸ்.பி., தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் புகையிலை தடுப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விழிப்புணர்வுகள், வீடுகள் தோறும் மேற்கொள்ளப்படும் அயோடின் பரிசோதனை, இளம் வயதில் சிறுமிகள் கருவுறுதல் தடுப்பு விழிப்புணர்வு, மகப்பேறு மரணம் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசிக்கப் பட்டது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தற்போதைய நிலை, வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி கலெக்டரிடம் எடுத்துரைக்கப்பட்டது. தேனி அரண்மனைப்புதுாரில் உள்ளது போல் 'நடப்போம் நலம்பெறுவோம்' திட்ட நடைபயிற்சி தளம் போன்றுபெரியகுளத்தில் 8 கி.மீ., துாரத்திற்கு நடைபயிற்சி தளம் உருவாக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது என்றனர்.