உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சின்னமனுாரில் ஆக்கிரமிப்பு அதிகம் நெருக்கடியில் தவிக்கும் தெருக்கள்

சின்னமனுாரில் ஆக்கிரமிப்பு அதிகம் நெருக்கடியில் தவிக்கும் தெருக்கள்

சின்னமனூர்: சின்னமனூர் நகர் முழுவதுமே ஆக்கிரமிப்பில் சிக்கி தவிப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட போதிய பாதை வசதி இல்லாத நிலை உருவாகி உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி வருகின்றனர்.சின்னமனூரில் 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். நகரில் குடியிருப்புகள் மிக நெருக்கமாக உள்ளது. முதல் வார்டு மேலப்பூலானந்தபுரம் தனித் தீவு போல் உள்ளது. மற்ற பகுதிகளான ஒன்றிய அலுவலக ரோடு, பொன்னகர் வீதி, நடுத்தெரு, நடுத்தெருவில் உள்ள குறுக்கு வீதிகள், வ.உ.சி. நகர் வீதிகள், கிழக்கு, வடக்கு, மேற்கு ரத வீதிகள், மார்க்கையன்கோட்டை ரோடு, மெயின்ரோட்டிற்கு மேற்கு பக்கம் உள்ள 5க்கும் மேற்பட்ட குறுக்கு வீதிகள், கருங்கட்டான்குளம், அக்ராஹரம் உள்ளிட்ட பல தெருக்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. ஒரு தெருகூட நெருக்கடி இல்லாமல் இல்லை. வீட்டின் தலைவாசல் வீதியை ஆக்கிரமித்து கட்டுவது, மேல்மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை தெருவில் கட்டுவது, டூவீலர், கார் பார்க்கிங் எல்லாம் தெருக்களில் கட்டுவது என குடியிருப்போர் ஆக்கிரமிப்பு நீண்டுகொண்டே உள்ளது.வாகன நடமாட்டமும் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் தெருக்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மெயின்ரோட்டில் கடைக்காரர்கள் நடு ரோடு வரை பொருட்களை வைத்து விற்கின்றனர். நகராட்சி கமிஷனர், நகரமைப்பு பிரிவு ஆக்கிரமிப்புகளை வேடிக்கை பார்த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நெருக்கடியில் தவிக்கின்றனர்.நகரில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டியது மிக முக்கியம். எனவே முதலில் தெருக்களை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை துவக்க வேண்டும். குறிப்பாக ரத வீதிகள் மற்றும் மெயின் ரோட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி