போடி நகராட்சி தலைவரின் கணவர் ஆஜராக வருமான வரித்துறை சம்மன்
போடி: தேனி மாவட்டம் போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரியின் கணவர் சங்கர் ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக விசாரணை முடிந்த, நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் வழங்கி சென்றனர். போடி நகராட்சி தலைவராக தி,மு.க., வை சேர்ந்த ராஜராஜேஸ்வரி உள்ளார். இவரது கணவர் சங்கர் தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். பல ஆண்டுகளாக ஏலக்காய் வியாபாரம் செய்கிறார். இதில் ரூ. பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரில் 5 நாட்களுக்கு முன் வருமான வரித்துறை அதிகாரிகள் 50 பேர் கொண்ட குழுவினர் சங்கரின் வீடு, கோடவுன், கேரளா கொடுவிலார் சிட்டியில் உள்ள ஏலக்காய் கோடவுனில் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். மூன்று நாட்களுக்கு முன் மனைவி ராஜராஜேஸ்வரி அதிகாரிகள் முன் ஆஜரானார். மறுநாள் சங்கர் விசாரணைக்கு ஆஜரானார். சங்கரை வெளியே விடாமல் 3வது நாளாக நேற்று காலை 9:00 மணி வரை விசாரித்தனர். விசாரணை முடிந்த பின் தகவல் தெரிவிக்கும் நாளில் அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகும்படி சங்கரிடம் சம்மன் வழங்கி கையெழுத்து பெற்று சென்றனர். அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டபோது பதில் எதுவும் கூறவில்லை. விசாரணை குறித்து சங்கர் கூறியதாவது: கேரள வள்ளக்கடவு பகுதியில் ஏலக்காய் ஏல மையம் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களுக்கு ஏலக்காய் மூடைகள் விற்பனைக்காக அனுப்பப்பட்டன. பங்குதாரர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மையம் செயல்படவில்லை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்கு தாக்கல் வேண்டும். கடந்த ஓராண்டாக முறையாக கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு வந்தனர். கணக்குகளை சரி பார்த்தஅவர்கள் தாங்கள் தெரிவிக்கும் நாளில் மேல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என கூறி சம்மன் வழங்கி சென்றனர் என்றார்.