பாலிதீன் புழக்கம் அதிகரிப்பு
கம்பம் : பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் புழக்கம் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்களில் தொடர்கின்றன. அதிகாரிகளின் தொடர் நடவடிக்கை, கண்காணிப்பு இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.பாலிதீன், பிளாஸ்டிக் பைகளால் மண்ணின் வளம் கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இதை தடுக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பாலிதீன், பிளாஸ்டிக், பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் பழக்கப்பட்டதாலும், வேறு வழி தெரியாமலும் பாலிதீன் புழக்கம் தொடர்கதையாகி வருகிறது. ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை வரும் இயந்திரங்களை கம்பம் நகராட்சி நிறுவியது. ஆனால் பயன்பாட்டில் இல்லை. பெயருக்கு திறந்து வைத்தனர். இப்போது யாரும் அதை கண்டு கொள்வது இல்லை. உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ரெய்டு நடத்தி பாலிதீன் பைகளை பறிமுதல் செய்கின்றனர்.ஆனால் டன் கணக்கில் கோடவுன்களில் பதுக்கி வைத்து விற்பனைக்காக வைத்துள்ள மொத்த வியாபாரிகளை கண்டுகொள்வது இல்லை. அவர்கள் தொடர்ந்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். யார் சப்ளை செய்கின்றனர் என கண்டறிந்து மொத்த வியாபாரிகளிடம் ரெய்டு நடத்த வேண்டும். கம்பம், சின்னமனுார் நகரங்களில் தொடர் நடவடிக்கையில் அதிகாரிகள் களம் இறங்க வேண்டும்.