58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் முழு அளவை எட்டி வருவதால் 58ம் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் வசதி உள்ளது. வைகை அணை நீர்மட்டம் 67 அடிக்கும் அதிகமாக இருந்தால் கால்வாய் வழியாக அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும். வைகை அணை நீர்மட்டம் இந்த ஆண்டு ஜூலை 29ல் 67 அடியை எட்டியது. பெரியாறு அணை நீர் வரத்தால் ஆக., 5ல் 69 அடியாக உயர்ந்தது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீருக்கு அணையில் நீர் திறந்து விடப்பட்டதால் செப்., 26ல் நீர்மட்டம் 67 அடியாக குறைந்தது. இதனால் 58 ம் கால்வாயில் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு குறைந்தது. தேனி மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அக்.,18 முதல் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து அக்.,20 முதல் 69 அடியை கடந்துள்ளது. அணைக்கு வரும் நீர் பாதுகாப்பு கருதி கடந்த மூன்று நாட்களாக ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. பொதுவாக 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 100 முதல் 150 கன அடி அளவு மட்டுமே நீர் திறந்து விடப்படும். கால்வாய் வழியாக குறைவான அளவு நீர் சென்றாலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். நிலத்தடி நீரால் விவசாயத்தை தொடர முடியும் என்பதால் 58ம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். தண்ணீர் திறக்க அரசு உத்தரவுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த இரு ஆண்டு களாக 58 ம் கால்வாயில் நீர் திறப்பு இல்லாததால் கால்வாயில் பல இடங்களில் புதர் மண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.