தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்திட அறிவுறுத்தல்
தேனி: பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ராபி பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்தரி, கொத்தமல்லி, தக்காளி, முட்டைகோஸ் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்திட அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா கூறியதாவது: பயிர்கள் சாகுபடி செய்த பின் அசாதாரண சூழல், குறைவான மழை, விதைப்பில் இருந்து அறுவடை வரையில் ஏற்படும் பயிர் இழப்புகள், புயல், மழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற நிகழ்வுகளால் பயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. பயிர் காப்பீடு செய்திருந்தால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. காப்பீட்டு பிரிமியம் தொகையாக ஏக்கருக்கு வாழைக்கு ரூ.3430ஐ 2025 பிப்.,28க் குள், கத்தரிக்கு ரூ.1205, தக்காளிக்கு ரூ.927.50, முட்டைக்கோஸூக்கு ரூ.1227.50யை 2025 ஜன.,31க்குள், கொத்தமல்லிக்கு ரூ.647.50 யை 2025 ஜன.,17க்குள் செலுத்த வேண்டும். விவசாயிகள் பதிவுக் கட்டணம், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், ஆதார் நகல் ஆகியவற்றுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்., என்றார்.