ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்கும் திட்டம் முடக்கம்: தமிழக -கேரள எல்லை வழியாக தொடரும் கடத்தல்
தேனி மாவட்டத்தில் கேரளா செல்லும் வழித்தடங்களாக போடி முந்தல், குமுளி, கம்பமெட்டு பகுதிகள் உள்ளன. இந்த வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி, கனிமம், மது, கஞ்சா, ஸ்பிரிட், ஏலக்காய், மிளகு உள்ளிட்ட நறுமணப்பொருட்கள் ஆகியவை கடத்தி செல்கின்றனர். கேரளாவில் இருந்து காபி, ஏலம், மிளகு கடத்தப்படுவதுடன் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து தமிழக பகுதிக்குள் கொட்டும் அவலம் நடைபெறுகிறது.இவற்றை தடுக்க தேனி மாவட்ட எல்லையில் போலீஸ் மற்றும் வனத்துறை சோதனை சாவடிகள் தனித்தனியாக செயல்படுகின்றன. இந்த சோதனை சாவடிகள் செயல்பட்டாலும் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் சோதனை சாவடி பணி என்றாலே மிக சிரமமான பணி என கருதி வேண்டா வெறுப்பாக பணி செய்வார்கள். இதனால் சோதனை சாவடிகள் பெயரளவில் இயங்கின. ரேஷன் அரிசி கடத்தல், கனிம கடத்தல், போதை பொருட்கள், திருட்டு வாகனங்கள் கொண்டு செல்லுதல் என தடையின்றி எல்லையை கடந்து செல்கின்றன.இப் பிரச்னைக்கு தீர்வு காணவும், 24 மணிநேரமும் சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், நவீன கருவிகள் மூலம் தொலை தொடர்பு வசதி மேம்படுத்துதல் ஆகிய வசதிகளுடன் போலீஸ், வனத்துறை, வருவாய், வணிகவரி, சுகாதார துறை, வட்டார போக்குவரத்து துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைந்து போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி ஆகிய மூன்று இடங்களில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்க திட்டமிடப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு முன்பு போடி அருகே முந்தலில் 26 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் கலெக்டர் முரளீதரன் தலைமையில், முன்னாள் எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்க்ரே, வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். இது போல குமுளி, கம்பம்மெட்டு பகுதியிலும் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. அதன் பின் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மையம் அமைப்பதற்கான பணிகள் துவங்க எவ்வித நடவடிக்கை எடுக்காததால் திட்டம் முடங்கியுள்ளது. முடங்கிய நிலையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடி மையம் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.