உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆக்கிரமிப்பில் மணக்காட்டு கண்மாய்: பாசன விவசாயிகள் துார்வார எதிர்பார்ப்பு

 ஆக்கிரமிப்பில் மணக்காட்டு கண்மாய்: பாசன விவசாயிகள் துார்வார எதிர்பார்ப்பு

பெரியகுளம்: மழை காலங்களில் தண்ணீர் தேங்கி 'மினி கடல்' போல் காட்சியளித்த மணக்காட்டு கண்மாய் ஆக்கிரமிப்பினால் கொக்கு மட்டும் நீர் பருகும் ஓடையாக மாறி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்திற்கு உட்பட்ட பெரியகுளம் அருகே மணக்காட்டு கண்மாய் 15 ஏக்கர் பரப்பளவு உடையது. கல்லாற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர் வாய்க்கால் வழியாகவும், நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையால் மணக்காட்டு கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. இக்கண்மாய் நீரினை நம்பி நுாற்றுக்கணக்கான ஏக்கரில் மா, தென்னை விவசாயம் நடந்து வருகிறது. சில ஆண்டுகளாக வாய்க்கால் பராமரிப்பு இல்லாததால், புதர் மண்டியுள்ளது. தற்போது கண்மாயில் 80 சதவீதம் ஆக்கிரமிப்பு உள்ளது. முந்தைய காலங்களில் அக், நவ., டிச., மாதங்களில் கண்மாயில் தண்ணீர் தேங்கி சிறிய கடல் போல் காட்சியளிக்கும். தண்ணீர் 8 மாதங்கள் விவசாயத்திற்கு பயன்படும். நுாற்றுக்கணக்கான கிணறுகளுக்கு ஊற்று கிடைக்கும். ஆக்கிரமிப்பு அகற்றுவது அவசியம் இளங்குமரன் (எஸ்.ஐ., ஓய்வு): பணி முடிந்த நிலையில் மூத்தோர் வழிகாட்டுதலிலும், இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பினாலும் விவசாயம் செய்ய வந்தேன். கண்மாய் நீர் விவசாயத்தின் உயிர் நீர். இதற்கு மாறுபட்டு கண்மாய் ஆக்கிரமிப்பால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத அபா ய நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் தண்ணீரை தேங்கவிடாமல் வெளியேற்றுகின்றனர். நீர் பாசனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். சேதமடைந்த கரைகள், மதகுகளை சீரமைத்து கண்மாயினை காப்பாற்ற வேண்டும். ஓடையாக மாறிய கண்மாய் சையது (பட்டதாரி விவசாயி): கண்மாயினை துார்வார வேண்டும். கண்மாய்க்கு செல்லும் விவசாயிகள் கரைகளில் கால் மிதிக்க முடியாத அளவிற்கு உள்ள களைச் செடிகளை அகற்ற வேண்டும். முந்தைய காலங்களில் கண்மாயில் தண்ணீர் தேங்கி மதகு வழியாக வெளியேறும் நீர், வராகநதியில் கலக்கும். அந்த அளவிற்கு நீர் வழிப்பாதைகள் சீராக இருந்தன. தற்போது ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மையால் கண்மாய் ' ஓடையாக' மாறி வருகிறது. நீர்ப்பாசனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ