நீர் வரத்து ஓடை ஆக்கிரமிப்பால் வறண்டு வரும் வள்ளிக்குளம் மூன்று கிராமங்களில் பாசன கிணறுகள் நீர் மட்டம் உயர்வதில் சிக்கல்
உத்தமபாளையம்: நீர் வரத்து ஒடைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் வள்ளியம்மன் குளத்திற்கு நீர் வரத்து தடைபட்டுள்ளது. இதனால் அனுமந்தன்பட்டி, கோவிந்தன்பட்டி, காக்கில்சிக்கையன்பட்டி பாசன கிணறுகளின் நீர் மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி வள்ளியம்மன்குளம் கண்மாய்க்கு நீர் வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பால் மறைந்து போனதால் குளத்தில் கன மழை பெய்தும் நீர் நிரம்பாத நிலை உள்ளது.வள்ளியம்மன் குளம் பாசனத்திற்கு நேரடியாக பயன்படாவிட்டாலும் இப்பகுதியில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர பயன்பட்டு வந்தது. இக் குளம் 10 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இப்பகுதியில் உள்ள அனுமந்தன்பட்டி மட்டுமல்லாது கோவிந்தன்பட்டி, காக்கில் சிக்கையன்பட்டி பகுதி தோட்ட கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர குளம் பயன்படும். கோடைகாலங்களில் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. மற்ற கண்மாய்களை போல இக் குளம் ஆக்கிரமிப்பில் சிக்கவில்லை. இதற்கு காரணம் குளத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு நேர் மாறாக இக் குளத்திற்கு மலைக்குன்றுகளில் இருந்து வரும் காட்டோடைகளின் நீர் தடுக்கப்பட்டு விட்டது. 5 க்கும் மேற்பட்ட ஓடைகள் ஆக்கிரமிப்பில் சிக்கி காணாமல் போய்விட்டது. போதாக் குறைக்கு பேரூராட்சி சார்பில் ஓடையில் குப்பையை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். மேலும் குளத்தில் மண் எடுக்க வழங்கிய அனுமதியால் கண்மாய் ஆழமாகி உள்ளது. குளத்திற்குள் 100 க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் வளர்ந்துள்ளதால், மரங்களை சுற்றி மண் அள்ள முடியவில்லை. இதனால் குளம் முழுவதும் தூர்வார முடியாமல் மேடும், பள்ளங்களாக உருமாறியுள்ளது. இதனால் முழுமையாக நீர் தேக்க முடியவில்லை. நீர் தேங்காததால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தரத்தில் தொங்கும் மரங்கள்
செந்தில், விவசாயி, அனுமந்தன்பட்டி: வள்ளிக்குளம் துார் வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். குளத்தில் அதிகளவு மண் அள்ளியதால், மரங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலை உள்ளது. குளத்தில் நீர் முழுமையாக தேக்க வேண்டும். 18 ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடும் போது நிரம்புகிறது. ஆனால் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது . கோடையில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளின் குடிநீர் தேவையை இக் குளம் போக்கி வந்தது. ஆனால் சமீபத்தில் அந்த நிலை மாறி உள்ளது. விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். குளத்தை சுத்தப்படுத்தி, விவசாயம் செழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓடையை குப்பையில் இருந்து மீட்க வேண்டும்
கண்ணன், விவசாயி, காக்கில் சிக்கையன்பட்டி: குளத்தில் தண்ணீர் நிரம்பிய வண்ணம் இருந்தால் மூன்று கிராமங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கோடை காலங்களில் கிணறுகளில் நீர் மட்டம் உயர இக் குளம் பெரிதும் விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது. மரங்களை வெட்டாமல் ஒரே சீராக தூர் வார வேண்டும். தண்ணீர் வரும் வரத்து ஓடைகளில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும், ஓடை ஆக்கிரமிப்புக்களை அகற்றினால் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரத்து ஏற்படும் . தூர் வாராமல் இருப்பது நீண்ட கால பிரச்னையாகும். வருவாய்த்துறை,பேரூராட்சியால் மட்டும் செய்ய முடியாது. அரசு சிறப்பு நிதியை ஒதுக்கி இந்த பணியை மேற்கொள்ள வேண்டும்.