| ADDED : மார் 01, 2024 12:23 AM
உத்தமபாளையம் : உத்தமபாளையம் ரதவீதிகள் பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக மாறியுள்ளது.இப் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள ரதவீதிகள் பராமரிப்பு செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.வாகனங்கள் மற்றும் பாதசாரிகளும் நடக்க கூட முடியாத அவலநிலை உள்ளது. வடக்கு, மேற்கு, கிழக்கு ரத வீதிகளும், மெயின் பஜார் வீதியும் சொல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. முதியவர்கள், குழந்தைகள் நடக்க முடியாமல் ஆட்டோவில் செல்ல வேண்டியுள்ளது.. ஏற்கெனவே குண்டும் குழியுமாக உள்ள ரதவீதி ரோட்டில் 'ஜல் ஜீவன்' திட்டத்தில் குழாய் பதிப்பதாக கூறி ரோட்டை கொத்தி குதறி சென்றுள்ளனர். இதனால் ஒரு பகுதி மேடாகவும், ஒரு பகுதி பள்ளமாகவும் மாறி விட்டது. காலை மற்றும் மாலையில் பள்ளி பஸ்கள் வரும் போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பேரூராட்சி நிர்வாகமோ எதைப்பற்றியும் கவலைப்படுவதாக தெரியவில்லை. ரதவீதிகளை பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.