கலப்படத்தால் வெல்லம் விலை கசக்கிறது விலை குறைவால் விவசாயிகள் வேதனை
பெரியகுளம், செப். 2- கலப்படம் வெல்லத்தால் தேனி மாவட்டம், லட்சுமிபுரம் வெல்லம் மார்க்கெட்டில் விலை குறைந்தது. இதனால் ஓணம் விற்பனை மந்த நிலையால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பெரியகுளம் தாலுகா லட்சுமிபுரம், தாமரைகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இப் பகுதி விவசாயிகள் பலர் கரும்பை அரைத்து கொப்பரையில் இட்டு பக்குவமாக காய்ச்சி வெல்லப்பாகு தயாரிக்கின்றனர். இதனை மிதமான சூட்டில் உருண்டையாக்கி 42 கிலோ எடை மூட்டையாக கட்டுகின்றனர். லட்சுமிபுரம் 4 வெல்ல ஏல கடைகளில் வெவ்வேறு நான்கு நாட்களில் ஏலம் நடைபெறும். இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், அதிகளவில் கேரளாவிற்கு வெல்லம் விற்பனைக்கு செல்கிறது. கேரளா மக்கள் காபி, டீ, கட்டங் காப்பியில் வெல்லம் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். வெல்லம் விலை கசக்கிறது: ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு லட்சுமிபுரம் வெல்ல மார்க்கெட்டில் விற்பனை களைகட்டும். இந்த சீசனில் தினமும் 10 முதல் 20 டன் வெல்ல மூடைகள் அனுப்பப்படும். விலையும் கணிசமாக உயரும். கேரளாவில் செப்.5 ல் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் கூறுகையில்: ஒரு ஏக்கர் கரும்பு விளைச்சலுக்கு உரமிடுதல் ,கிரசர் செலவு உட்பட ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் செலவாகிறது. இதனால் 42 கிலோ மூடை ரூ.2500 க்கு விற்றால் கட்டுப்படியாகும். கடந்தாண்டு ஓணத்தின் போது பச்சை வெட்டு வெல்லம் மூடை ரூ.2400 விற்றது. தற்போது ரூ.1930க்கும், ரூ. 2300க்கு விற்ற ரோஸ் 1900. ரூ.2200 க்கு விற்ற செங்கால் ரூ.1850க்கும், ரூ.2000 க்கு விற்ற கருப்பு ரூ.1600 ஆக குறைந்துள்ளது. இதனால் வேதனையில் உள்ளோம் என்றனர். என்ன காரணம்: சில மாவட்டங்களில் விவசாயிகள் சிலர் வெல்லத்தில் ஜீனியை கலந்து தயாரிப்பதால் இந்த வெல்லம் லட்சுமிபுரத்தில் தயாராகும் வெல்லத்தை விட கிலோ ரூ.10 குறைவு. கலப்படம் வெல்லத்தினால் லட்சுமிபுரம் வெல்லம் மார்க்கெட் குறைந்துள்ளது. கலப்படத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். --