உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் ரூ.200 கோடியிலான ஜல்ஜீவன் திட்ட பணிகள் முடக்கம்

மாவட்டத்தில் ரூ.200 கோடியிலான ஜல்ஜீவன் திட்ட பணிகள் முடக்கம்

தேனி: மாவட்டத்தில் ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டுள்ள 'ஜல்ஜீவன்' திட்டம் பல ஊர்களில் அரையும், குறையுமாக நடந்து பணி நிறைவு பெறாமல் உள்ளது. இதனால் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை தொட்டிகள், குழாய்கள் பயன்பாடு இன்றி சேதமடைந்து வருகிறது.ஊரக பகுதிகளில் குடியிருக்கும் அனைவருக்கும் தினமும் 55 லி.,தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் 2019ல் மத்திய அரசின் 'ஜல்ஜீவன்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத் திட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு, மக்கள் தொகை அடிப்படையில் மேல்நிலை தொட்டிகள், புதிய நீர் ஆதாரங்கள் அமைக்கும் பணிகள் நடந்தன. மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 130 ஊராட்சிகளில் சுமார் ரூ. 200கோடிக்கும் மேல் திட்ட பணிகள் 80 சதவீதம் நடைபெற்றுள்ளன.ஆண்டிபட்டி, கடமலை மயிலாடும்பாறை ஒன்றியங்களை தவிர பிற பகுதிகளில் இத்திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை ஒருலட்சத்து 32ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராமங்கள், குக்கிராமங்களில் ஒருலட்சம், 60ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில கிராமங்களில் அரைகுறையாக முடங்கியுள்ளது. பெரும்பாலான கிராமங்களில் மேல்நிலைத் தொட்டிகள், குழாய்கள் பயன்பாடின்றி உள்ளன. பணி முடித்து கிராமங்களில் வீட்டு இணைப்புகளுக்கு முறையான குடிநீர் வழங்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திட்டத்தின் நிலை குறித்து ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரிகளிடம் விபரம் கேட்டால் யாரும் வாய்திறப்பது இல்லை.

சேதமாகும் மேல்நிலை தொட்டிகள்

ஊராட்சி செயலாளர்கள் கூறுகையில், நீர்ஆதாரம் உள்ள கிராமங்களில் ஊராட்சிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. நீர் ஆதாரம் இல்லாத ஊராட்சிகள் குடிநீர் வடிகால் வாரியத்திடமிருந்து விலை கொடுத்து வாங்கி வினியோகம் செய்யும் நிலை உள்ளது. குடிநீர் வாரியத்தினர் 1991 மக்கட்தொகை அடிப்படையில் குடிநீர் வழங்குகின்றனர். இது தவிர ஜல்ஜீவன் இலவச திட்டம் என கருதி பொதுமக்கள் இணைப்பு பெற்றதற்கான டெபாசிட் தர மறுக்கின்றனர். பிற மாவட்டங்களில் தண்ணீர் வினியோகத்திற்கு இரும்பு குழாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில்பிளாஸ்டிக் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம் இல்லாத ஊர்களில் குழாய்களை சேதப்படுத்தி உள்ளனர். மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளதால் தொட்டிகள் சேதமடையும் நிலை உருவாகி உள்ளது. இத்திட்டம் வழிகாட்டுதல் இன்றி பணி நிறைவு பெறாமல் முடங்கி உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை