உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தமிழக வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதாக புகார் தடுக்க கேரளா காங்., சார்பில் சிறப்பு குழு

தமிழக வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதாக புகார் தடுக்க கேரளா காங்., சார்பில் சிறப்பு குழு

மூணாறு: கேரளா, இடுக்கி மாவட்டத்தில் எல்லையோர ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழக வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க சில கட்சிகள் முயற்சித்து வருவதாக புகார் எழுந்தது. இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு ஆகிய தாலுகாக்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் தமிழகத்தில் தேனி, மதுரை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டவர்கள். தேயிலை, ஏலம், காபி ஆகிய தோட்டங்களில் பல தலைமுறைகள் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கேரளா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்பட பல்வேறு ஆவணங்கள் வைத்துள்ளனர். மாவட்டத்தில் இரட்டை வாக்காளர்கள் உள்ளதை அறிந்தும் அப்பிரச்னையை தேர்தல் நேரங்களில் மட்டும் அதிகாரிகள் கையில் எடுப்பதால் இரட்டை வாக்காளர்களை ஒழிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக அரசியல் கட்சியினர் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இடுக்கி மாவட்டத்தில் எல்லையோர ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலில் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்களை சேர்க்கும் பணியில் சில கட்சியினர் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. 'ஆன் லைன்' வாயிலாக விண்ணப்பித்து கலந்தாய்வுக்கு அழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகப் போவதாக காங்கிரஸ் முடிவு செய்தது. தவிர தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலை ஆய்வு நடத்தி தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக காங்கிரஸ் சார்பில் சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை