அபராதம் தள்ளுபடி செய்ய வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் அதிகரிப்பு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
மூணாறு:ஊராட்சி விதித்த ரூ.50 ஆயிரம் அபராத தொகையை தள்ளுபடி செய்யுமாறு கேரள உயர் நீதிமன்றம் சென்ற தங்கும் விடுதி உரிமையாளர் பிரான்சிஸ்மில்டனுக்கு அபராத தொகையை ரூ. 1 லட்சமாக உயர்த்தி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மூணாறில் இக்கா நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் கழிவுகள் அருகில் உள்ள ஆற்றில் கொட்டியதாக ஊராட்சி சார்பில் கடந்த மே 23ல் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை தள்ளுபடி செய்யுமாறு விடுதி உரிமையாளர் பிரான்சிஸ்மில்டன் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தவிர விடுதி தன்னுடைய தந்தை பிரான்சிஸ்டிக்கோத்தாவின் பெயரில் உள்ளதால், கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என மனுவில் கூறியிருந்தார். ஆனால் ஊராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் தங்கும் விடுதியின் உரிமம் பிரான்சிஸ் மில்டன் பெயரில் உள்ளதாக தெரியவந்தது. அதனால் அபராத தொகையை மேலும் ரூ.50 ஆயிரம் உயர்த்திய நீதிமன்றம் ரூ.1 லட்சம் செலுத்துமாறு உத்தரவிட்டது. அத்தொகையை கேரள மாநில சட்ட சேவை ஆணையத்திடம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.