உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கேரள உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் வழியாக 175 கி.மீ., பயணித்த ஊழியர்கள்

 கேரள உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் வழியாக 175 கி.மீ., பயணித்த ஊழியர்கள்

மூணாறு: இடமலைகுடி ஊராட்சியில் நூறடிகுடியில் உள்ள ஓட்டு சாவடிக்கு தமிழகம் வால்பாறை வழியாக 175 கி.மீ., பயணம் செய்து ஓட்டு பதிவு இயந்திரங்களை ஊழியர்கள் கொண்டு சென்றனர். மூணாறு அருகில் உள்ள இடமலைகுடியில் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் மாநிலத்தில் மிக குறைந்த வாக்காளர்களாக 910 ஆண்கள், 893 பெண்கள் என 1803 வாக்காளர்கள் உள்ளனர். 14 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. இன்று நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் 41 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு செல்ல ரோடு வசதி சரிவர இல்லை. இன்று நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்காக மூணாறு அரசு தொழில் பயிற்சி மேல்நிலை பள்ளியில் இருந்து நேற்று ஓட்டு பதிவு இயந்திரம் இடமலைகுடி ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. வால்பாறை அருகில் உள்ள நூறடிகுடிக்கு பொருட்கள் மற்றும் ஊழியர்களுடன் நேற்று காலை 8:30 மணிக்கு வாகனம் புறப்பட்டது. மூணாறில் இருந்து வால்பாறை வரை 164 கி.மீ., தூரமும், அங்கிருந்து 11 கி.மீ., தூரம் ரியான் டிவிஷன் வரை வாகனத்தில் சென்று, அதன்பிறகு வனத்தினுள் 2 மணி நேரம் நடந்து நூறடிகுடிக்கு செல்ல வேண்டும். அங்கு தேர்தல் பணிக்குச் சென்ற ஓட்டு பதிவு அதிகாரி எத்தோவர்க்கீஸ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவிடம் ஓட்டு பதிவு இயந்திரத்தை வழங்கி தேவிகுளம் சப் கலெக்டர் ஆர்யா துவக்கி வைத்தார். இடுக்கி கலெக்டர் தினேசன்செருவாட் இடமலைகுடி ஊராட்சியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். சப் கலெக்டர் அனுப்கார்க் உள்பட உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை