முல்லைப்பெரியாறு அணைக்கு மேல் பறந்த தனியார் ஹெலிகாப்டர் கேரள போலீசார் விசாரணை
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணைக்கு மேல் தனியார் ஹெலிகாப்டர் பறந்ததால் கேரள வனத்துறை, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முல்லைப் பெரியாறு அணை பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ளது. அணை கேரளாவில் அமைந்திருந்தாலும் தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணை பலவீனம் அடைந்து விட்டதாகவும் அணைக்கு அருகில் புதிய அணை கட்ட வேண்டும் எனவும் கேரளாவில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே வேளையில், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என தமிழக தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு மேல் நேற்று மதியம் தனியார் ஹெலிகாப்டர் பறந்தது. அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணைக்கு மேல் ஹெலிகாப்டர் பறந்தது குறித்து கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெரியாறு புலிகள் காப்பகத்தில் எவ்வித அனுமதியும் இன்றி ஹெலிகாப்டர் பறந்ததால் கேரள வனத்துறையினரும் விசாரணையை துவக்க உள்ளனர்.