குச்சனுார் சனீஸ்வரபகவான் கோயில் ஆடி திருவிழா 2வது ஆண்டாக ரத்து
சின்னமனூர்,:தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்படுவதாக ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கு என தனி கோயில் தேனி மாவட்டம் குச்சனூரில் மட்டுமே உள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருக்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் ஆறு கண்களுடன் உள்ளார். சனீஸ்வர பகவான் ரகு வம்சத்தில் பிறந்தவர் என்பதால் நெற்றியில் திருநாமம் தரித்தும், ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சிவபெருமானுக்கு அடுத்து சனீஸ்வர பகவான் திகழ்வதால் கிரீடத்தில் விபூதி பட்டையும் அணிந்துள்ளார்.ஆண்டுதோறும் ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு பெருந்திருவிழா நடக்கும். ஆடி முதல் நாள் கொடியேற்றம் நடைபெறும். நாளை ( ஜூலை 17 ) ஆடி முதல் நாளில் கொடியேற்றம் நடைபெற வேண்டும். ஆனால் கடந்தாண்டு போல இந்தாண்டும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக ஹிந்து சமய அறநிலையத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் கொடியேற்றம் நடக்கவில்லை.கடந்தாண்டு ஹிந்து சமய அறநிலைய துறை உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கொடியேற்றம், சுவாமி புறப்பாடு தவிர மற்ற நிகழ்ச்சிகளை நடத்த ஜகோர்ட் உத்தரவிட்டது. ஆடிப்பெருந்திருவிழாவில் 3வது வாரம் பெரும் திருவிழாவாகவும், சனீஸ்வர பகவானுக்கும், நீலாதேவிக்கும் திருக்கல்யாணம், சக்தி கரகம் எடுத்தல், மஞ்சன காப்பு சாத்துதல், முளைப்பாரி ஊர்வலத்துடன், சக்தி கரகம் கலக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். இந்தாண்டு அவை நடக்காது. ஆனால் திருக்கல்யாணம் மட்டும் வழக்கம் போல நடக்கும் என கோயில் அதிகாரிகள் கூறினர்.ரூ 1.27 கோடி மதிப்பீட்டில் உபயதாரர்களால் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. செயல் அலுவலர் ஜெயராமன் கூறுகையில், ''வழக்கம் போல ஆடி மாதம் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை. வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஐகோர்ட் உத்தரவுப்படி நிகழ்ச்சிகள் நடைபெறும்,'' என்றார்.