தேனியில் துாய்மை பணிக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க கடிதம்
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சியில் துாய்மை பணிகள் மேற்கொள்ள கூடுதல் பணியாளர்களை நியமிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகரில் 30 ஆயிரம் வீடுகளில் ஒருலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். தினமும் 15.45 டன் மக்காத குப்பை, 18 டன் மக்கும் குப்பை சேகரமாகிறது. நிரந்த துாய்மை பணியாளர்கள் 77 பேர், தனியார் நிறுவன பணியாளர்கள் 140 பேர் என மொத்தம் 217 பேர் துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் நிரந்தர பணியாளர்கள் நுண்ணுர செயலாக்க மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர். அவர்களில் 15 பேர் ஓய்வு பெற்றனர். அவர்கள் கவனித்து வந்த பணிகளை தனியார் நிறுவன பணியாளர்கள் கவனித்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் சுகாதார பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.இதுபற்றி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளை நகராட்சியுடன் இணைத்தால் சேகரிக்கப்படும் குப்பை அளவு 40 டன் என்ற அளவை தாண்டும். எனவே, தனியார் நிறுவனம் மூலம் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை அரசுக்கு அனுப்பி உள்ளோம்,' என்றார்.