எம்.சாண்ட், ஜல்லி விலை உயர்வு வீடு கட்டுவோர் அதிருப்தி
தேனி: தேனி மாவட்டத்தில் ஒரு யூனிட் எம்.சாண்ட் விலை ரூ.1000, ஜல்லிக்கற்கள் விலை ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் வீடு கட்டுவோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.கட்டுமான பணிகளில் அதிகமாக எம்.சாண்ட் கலவையும், கான்கிரீட் பணிகளுக்கு முக்கால் இஞ்ச் ஜல்லிக்கற்கள் பயன்படுத்தப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன் ஒரு லோடு டிப்பர் லாரி (3.8 யூனிட்) எம்.சாண்ட் ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.17 ஆயிரமாக உயர்ந்துள்ளது.ஜல்லிக்கற்கள் விலை உயர்வு:கான்கிரீட் கலவைக்கான முக்கால் இஞ்சி ஜல்லிக்கற்கள் ஒரு யூனிட் ரூ.2800க்கு விற்பனையாது. தற்போது ரூ.700 அதிகரித்து, ஒரு யூனிட் ரூ.3500 ஆக உயர்த்தி உள்ளனர். ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை தினங்கள், அதற்கடுத்து வரும் வாஸ்து நாட்களில் புதிய கட்டுமானங்களை துவக்க உள்ளோர் மிகுந்த சிரமத்தில் தவிக்கின்றனர். விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மக்கள் கூடுதல் பணத்தேவை ஏற்படும் என்பதால், கட்டுமான பணி துவக்குவதை நிறுத்தி உள்ளனர்.கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலைஉயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.