தேனி ஆவினில் காட்சிப்பொருளான பலகோடி மதிப்பிலான இயந்திரங்கள்
தேனி, : தேனி ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் பலகோடி மதிப்பிலான இயந்திரங்கள் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக மாறி வருகின்றன.தேனியில் மதுரைரோட்டில் உள்ள சிட்கோவில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் மையம் உள்ளது. இங்கு பால் எடைபோடும் இயந்திரம், குளிரூட்டும் இயந்திரம், கேன் சுத்தம் செய்யும் இயந்திரம், பால் சேமிப்பு இயந்திரம் என பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் உள்ளன.இந்த மையத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை சுமார் 1.30 லட்சம் லிட்டர் பால் குளிரூட்டும் வகையில் பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. தற்போது மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 60 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. மாவட்டத்தின் பிற பகுதியில் 7 இடங்களில் புதிய குளிரூட்டும் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டதால் தேனி சிப்காட்டிற்கு 10ஆயிரம் லிட்டருக்கு குறைவாகவே குளிரூட்ட பால் கொண்டு வரப்படுகிறது. இதனால் ஆவினில் உள்ள பல இயந்திரங்கள் பயன்பாடின்றி துருப்பிடித்து வருகின்றன. பால் உற்பத்தியை அதிகரித்து பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அல்லது தேவையுள்ள இடங்களுக்கு இயந்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயந்திரங்கள் வீணாவதால் ஆவின் நிதி இழப்பு அதிகரித்து வருகிறது.