மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு கோயில்களில் திரளாக குவிந்த பொது மக்கள்
தேனி : மாவட்டத்தில் வீரபாண்டி முல்லைப் பெரியாறு தடுப்பணைக்கரை, கண்ணீஸ்வரமுடையார் கோயில் ஆற்றங்கரை, சுருளி அருவி, பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் படித்துறை ஆகிய பகுதிகளில் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பொது மக்கள் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். தேனி வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணை கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்தவர்கள் தர்ப்பணம் கொடுத்து, ஆற்றில் நீராடி முன்னோர்களை வழிபட்டனர். பின் கண்ணீஸ்வரமுடையார் கோயில், கவுமாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அம்மன், சுவாமி தரிசனம் பெற்று சென்றனர். பெரியகுளம் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் நுாற்றாண்டு பழமையானது. இதன் அருகே செல்லும் வராகநதி ஆற்றின் இருபுறம் ஆண், பெண் மருதமரங்கள் உள்ளன. நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் அதிகாலை முதல் குளித்து, அதற்கு முன்னதாக திதி மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பாலசுப்பிரமணியர் கோயிலில் சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். கம்பம் சுருளி அருவியில் நேற்று அதிகாலை 5:00 மணி முதல் ஆயிரக்கணக்கில் பொது மக்கள் திரண்டனர். தேனி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நுாற்றுக்கணக்கில் வாகனங்களில் வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்ததால் வாகனங்களை நிறுத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. சுமார் 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் ரோட்டின் பக்கவாட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டன. சுருளி அருவியில் போதிய அளவு தண்ணீர் விழுந்த போதும், குளிப்பதற்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுருளி அருவியில் குளித்த பொது மக்கள் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம், தங்கள் முன்னோர்களின் பெயர்களைக் கூறி தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து இங்குள்ள பூதநாராயணர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் முன்னோர்களின் பெயர்களில் அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆதி அண்ணாமலையார் கோயிலில் நடந்த அன்னதானத்தில் பொது மக்கள் திரளாக பங்கேற்றனர். இந்த கோயிலில் சிவனடியார் முருகன் சுவாமிகள் அன்னதானத்தை நடத்தினார். பொது மக்கள் அவதி அடிப்படை வசதிகள் குறிப்பாக போதிய எண்ணிக்கையில் உடைமாற்றும் அறைகள் இல்லாமலும், கழிப்பறைகள் வசதி இல்லாமலும் பொது மக்கள் அவதிப்பட்டனர். தேவையான வசதிகள் செய்து தர வனத்துறை முன்வர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து, சென்றனர். போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர். போடி பிச்சாங்கரை மலைப்பகுதி கீழச்சொக்கநாதர் கோயில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிவனின் தரிசனம் பெற்றனர். மேலச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. போடி அருகே அணைக்கரைபட்டி மரக்காமலை முனீஸ்வரன், லாட சன்னாசி கோயிலில் சுவாமிகள் சன்னாசிராயர், முனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. போடி பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லையா சுவாமி, சுப்ரமணியர் சுவாமி, விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் உள்ளிட்ட கோயில்களில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன. திரளான பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.