டாப்- ஸ்டேஷன் வனப்பகுதியில் கூடாரம் அமைத்தவர் கைது மூவர் தலைமறைவு
போடி : மூணாறு அருகே டாப் - ஸ்டேஷன் வனப்பகுதியை ஆக்கிரமித்து கூடாரம் அமைத்து வன விலங்குகளை வேட்டையாட கன்னி வலை வைத்து இருந்த நால்வரில் ஒருவரை கைது செய்தனர். தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர்.போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்டது டாப் - ஸ்டேஷன். சுற்றுலா தலமான இப்பகுதியில் மூணாறு அருகே எல்லப்பட்டியைச் சேர்ந்த சின்னப்பன், இவரது மகன்கள் ரவீந்திரன் 35, முருகராஜ் 30, மருமகன் சுரேந்தர் 40, ஆகியோர் வனப்பகுதியை ஆக்கிரமித்து 3 ஆண்டுகளுக்கு மேலாக கூடாரம் அமைத்து இருந்தனர். கூடாரத்தை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வசூல் செய்தனர். வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கி அமைத்தும், வனவிலங்கு வேட்டையாடுவதற்கான கம்பியால் ஆன கன்னி வலைகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.தேனி உதவி வன பாதுகாப்பு அலுவலர் சிசில் கில்பர்ட் தலைமையில், போடி ரேஞ்சர் நாகராஜ், போடி டவுன் இன்ஸ்பெக்டர் கேத்தரின் மேரி, வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு வனப்பகுதியை ஆக்கிரமித்து கூடாரம் அமைத்திருந்த ரவீந்திரனை கைது செய்தனர். கூடாரம், ஜெனரேட்டர், மின் மோட்டார், வை பை கேமரா, கன்னி வலைகள், கேபிள் வயர்கள், மர அறுவை மெஷின், சோலார் பேனல் உள்ளிட்ட தளவாட பொருட்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவான சின்னப்பன், முருகராஜ், சுரேந்தர் மூவரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.