காங்கிரஸ் சார்பில் அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு
மூணாறு: கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டடம் இடிந்து பெண் இறந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று சுகாதாரதுறை அமைச்சர் வீணாஜார்ஜ் பதவி விலகுமாறு வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் அவரது உருவ பொம்மையை எரித்தனர்.கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஜூலை 3ல் கட்டடம் இடிந்து இடிபாடுகளில் சிக்கி தலையோலப்பரம்பு பகுதியைச் சேர்ந்த விஸ்ரூதன் மனைவி பிந்து 52, இறந்தார். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தை கண்டித்தும், அரசுக்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் காங்கிரஸ், பா.ஜ.க., ஆகியோர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சம்பவத்திற்கு பொறுப்பேற்று சுகாதார துறை அமைச்சர் வீணாஜார்ஜ் பதவி விலகுமாறு வலியுறுத்தி மூணாறில் காங்கிரஸ் மண்டல குழு தலைமையில் அமைச்சரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. காங்கிரஸ் மண்டல தலைவர் நெல்சன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. மணி துவக்கி வைத்தார். ஒன்றிய தலைவர் விஜயகுமார், துணை தலைவர் ஆன்ட்ரூஸ், ஐ.என்.டி.யு.சி. வட்டார தலைவர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.