| ADDED : ஜன 05, 2024 05:30 AM
போடி, : போடிமெட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக தனியார் வேன், ஜீப்களை நிறுத்தி வருவதால் போடி மூணாறு செல்லும் பஸ் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அவ்விடத்தை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.தமிழகம் கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் அமைந்துள்ளது போடிமெட்டு. எப்போதும் குளிர்ச்சியாகவும் பனிப்பொழிவுடன் காணப்படும். 4644 அடி உயரத்தில்உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர்மழை காரணமாக ஆங்காங்கே பாறைகளுக்கு இடையே இயற்கையாக உருவான நீரோடைகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.இப்பகுதியின் சீதோஷ்ண நிலையை ரசித்து, அலைபேசியில் செல்பி எடுத்து செல்கின்றனர். புத்தாண்டு விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.போடி மூணாறு செல்லும் ரோட்டில் உள்ள போடிமெட்டு ரவுண்டானா இருபுறமும் தனியார் வேன், ஜீப்புகளை அதிக நேரம் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.இதனால் போடி மூணாறு செல்லும், மூணாறு போடி வரும் பஸ்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் போடிமெட்டு மலைப் பகுதியை கடக்க முடியாமல் போக்குவரத்திற்கு இடையூறுஏற்படுகிறது.குறிப்பாக போடிமெட்டு செக்போஸ்டில் 2 போலீசார் மட்டுமே பணியில் இருப்பதால் போக்குவரத்தை சீரமைக்க முடியாத நிலை உள்ளது.சுற்றுலாப் பயணிகள், வாகனங்களின் வருகையும் அதிகரித்து வரும் நிலையில் போடிமெட்டில் கூடுதலாக போலீசார் நியமிப்பதோடு, போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வரும் வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களை அப்புறப்படுத்த போடி டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.