தேனியில் ரோட்டில் இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்கள் அவதிப்படும் வாகன ஓட்டிகள்
தேனி: தேனியில் மதுரை ரோடு நேரு சிலை அருகே ஆட்டோக்கள் அணிவகுத்து நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் உள்பட வாகனங்களும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.தேனி நகரின மையப்பகுதியில் பழைய பஸ் ஸ்டாண்ட் இயங்கி வந்தது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ராஜவாய்க்காலில் துார்வாரி கால்வாய் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதனால் பஸ்கள் பயணிகளை மதுரைரோட்டில் பகவதியம்மன் கோவில் தெரு அருகிலும், அதன் எதிரிலும் நிறுத்தி ஏற்றி செல்கின்றன. ஆனால், கொடுவிலார்பட்டி, க.விலக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள் மதுரை ரோட்டில் நேரு சிலையில் இருந்து பகவதியம்மன் கோவில் தெரு வரை வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. இதனால் நேரு சிலை அருகே வாகனங்கள் திரும்புவதில் சிரமம் ஏற்படுகிறது. மற்ற வாகனங்கள் மோதிக் கொள்கின்றன. ஆட்டோக்களால் ஏற்படும் நெருக்கடியால் சில நேரங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. ஆட்டோக்களை ஓரிடத்தில் நிறுத்தவும், இடையூறாக மற்ற வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரியுள்ளனர்.