இறப்பு சான்றிதழ் 21 நாட்களுக்குள் பெற நகராட்சி அறிவுறுத்தல்
தேனி : இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும் என பொதுமக்களுக்கு நகராட்சி சுகாதாரபிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தேனி நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: பொது மக்கள் சிலர் உறவினர்கள் உயிரிழந்து சில நாட்களில் விண்ணப்பிப்பதில்லை. சொத்து பிரித்தல் அல்லது பிற அரசு சேவைகள் தொடர்பாக தேவைப்படும் போது விண்ணப்பிக்கின்றனர். இதனால் இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் தேவையில்லாத காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வீட்டில் முதியவர்கள், உறவினர்கள் இறந்தால் 21 நாட்களுக்குள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும். அதே போல் பிறப்பு சான்றிதழ் பெறும் போது பெற்றோர்கள் பலரும் பெயர் பதிவு செய்யாமல் சான்றிதழ் பெறுகின்றனர். சான்றிதழில் ஒரு ஆண்டிற்குள் குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். பள்ளியில் சேர்க்கும் போது அல்லது பிற வருவாய் சான்றிதழ்கள் வாங்கும் போது சிலர் குழந்தைகள் பெயரை பதிவு செய்ய வருகின்றனர். இதனால் கால தாமதம் ஏற்படும். இதனை தவிர்க்க குழந்தைகள் பிறந்து ஓராண்டிற்குள் பெயரை சான்றிதழில் பதிவு செய்ய வேண்டும் என்றனர்.