வனவிலங்குகள் நடமாட்டம் மூணாறு மக்கள் அச்சம்
மூணாறு : மூணாறு பகுதிகளில் நேற்று முன்தினம் நடமாடிய வனவிலங்குகளால் மக்கள் அச்சம் அடைந்தனர். மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் நகரில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள டி.எஸ்.பி., குடியிருப்பு அருகே நேற்றுமுன் தினம் காலை 7:00 மணிக்கு ரோட்டில் காட்டு மாடு நடமாடியது. அப்பகுதியில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள பெரியவாரை எஸ்டேட் பகுதியில் அதிகாலை 5:45 மணிக்கு நடமாடிய படையப்பா ஆண் காட்டு யானை ரோட்டோரம் உள்ள ரூபன், மணிகண்டன் ஆகியோரின் கடைகளை சேதப்படுத்தியதுடன் அன்னாசி, மாம்பழம், மக்காச் சோளம் உட்பட உணவு பொருட்களை தின்றது. மூணாறு அருகே கல்லார் எஸ்டேட் செல்லும் ரோட்டில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு தந்தம் கொண்ட ஒற்றை கொம்பன் முகாமிட்டுள்ளது. சேதம்: மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட், பாக்டரி டிவிஷனில் நேற்று முன்தினம் இரவு முகாமிட்ட மூன்று காட்டு யானைகள், அப்பகுதியில் வசிக்கும் ஜார்ஜ் வீட்டின் கேட், கார் ஆகியவற்றை சேதப்படுத்தின. அதிர்ச்சி: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட், டாப் டிவிஷனில் தேயிலை தோட்ட எண் 14ல் நேற்று காலை தொழிலாளர்கள் தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேயிலை தோட்டத்தினுள் பதுங்கி இருந்த சிறுத்தை சப்தம் கேட்டு பாய்ந்து சென்றது. அதனை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனவிலங்குகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.