இறந்த இருவர் மீதும் கொலை வழக்கு
உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகில் நடந்த இரட்டை கொலையில் கொலையான மாமனார், மருமகன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அனுமந்தன்பட்டியில் மே 1 இரவு 11:00 மணியளவில் இரு குடும்பத்தினருக்கு இடையே பாதை பிரச்னையில் எழுந்த மோதலில் முத்து மாயன் 80, அவரது மருமகன் சுந்தர் 60, வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ராணுவ வீரர் பார்த்திபன் 32, அவரது தாய் விஜயா ஆகியோரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் ராணுவவீரரின் தந்தை ராஜேந்திரன் புகாரில் கொலையான முத்து மாயன் 80 , சுந்தர் 60, சுதா 50, சூரியா 27 ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முத்துமாயன், சுந்தர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக போலீசார் கூறுகையில் , 'முதலில் இரு தரப்பினருக்கும் காயங்கள் இருந்ததால், இரண்டு தரப்பினரின் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்துள்ளோம். இனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது, இறந்தவர்களின் பெயர்களை நீக்கி விடுவோம்,' என்றனர்.