கிலோ ரூ.600க்கு விற்ற இயற்கை காளான்
ஆண்டிபட்டி: குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கும் இயற்கை காளான்கள் ஆண்டிபட்டி நகர் பகுதியில் கிலோ ரூ.600க்கு விற்பனையாகின.செப்டம்பர், அக்டோபர், நவம்பரில் பெய்யும் பலத்த மழைக்குப் பின் வயல் வரப்புகள், மலை சார்ந்த பகுதிகள், மேய்ச்சல் நிலங்களில் இயற்கை காளான் கிடைக்கும். இயற்கை காளானில் சுவை, சத்துக்கள் அதிகம் என்பதால் அனைவரும் இதனை ஆர்வத்துடன் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். கிராமங்களில் சீசனில் கிடைக்கும் காளான்களை தேடி கண்டுபிடித்து விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதை சிலர் பகுதி நேர தொழிலாக கொண்டுள்ளனர். ஆண்டிபட்டி பகுதியில் தற்போது இயற்கை காளான் கிலோ ரூ.500 முதல் 600 வரை தரத்திற்கு தக்கபடி வீதிகளில் விற்பனையாகிறது. காளான் விற்பனைக்கு வருபவர்களிடம் முன்கூட்டியே சொல்லி வைத்து, பலரும் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.