உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஓட்டெடுப்பிற்கு கோரம் இல்லாததால் தோல்வி

கம்பம் நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஓட்டெடுப்பிற்கு கோரம் இல்லாததால் தோல்வி

கம்பம்:கம்பம் நகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த தலைவர் மற்றும் துணை தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஒட்டெடுப்பிற்கு 19 கவுன்சிலர்கள் வந்தனர். தலைவர், துணை தலைவர் உட்பட 14 கவுன்சிலர்கள் வராததால் கோரம் இன்றி நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தாக கமிஷனர் உமாசங்கர் அறிவித்தார் கம்பம் நகராட்சி தலைவராக வனிதா, துணை தலைவராக சுனோதா உள்ளனர். இங்கு 33 வார்டுகளில் கவுன்சிலர்கள் தி.மு.க. 24 , அ.தி.மு.க. 7 , காங். மு.லீக் தலா ஒன்று வீதம் உள்ளனர். இதில் அ.தி.மு.க. 6 , தி.மு.க. 16 கவுன்சிலர்கள் தலைவர்,துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு கொடுத்தனர். அதற்கான ஒட்டெடுப்பு கூட்டம் நேற்று காலை நகராட்சி கூட்டரங்கில் நடந்தது. உத்தமபாளையம் ஆர்.டி.ஒ செய்யது முகமது கமிஷனர் அறையில் அமர்ந்து நடவடிக்கையை கண்காணித்தார். கூட்டரங்கில் இரண்டு ஒட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. பங்கேற்கும் கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் இரண்டு ஒட்டுக்கள் பதிவு செய்ய வேண்டும். காலை 10:40 மணியளவில் வேன் ஒன்றில் 15 தி.மு.க., அ.தி.மு.க. 3, மு.லீக் ஒருவர் என மொத்தம் 19 கவுன்சிலர்கள் கூட்ட அரங்கிற்குள் வந்தனர். கமிஷனர் உமாசங்கர் கூட்டத்தை நடத்தினார். தலைவர், துணை தலைவர் உள்பட 14 கவுன்சிலர்கள் ஆப்சென்ட் ஆகினர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற 5ல் 4 பங்கு கவுன்சிலர்கள் ஒட்டெடுப்பில் பங்கேற்க வேண்டும். அதாவது 27 பேர் ஓட்டெடுப்பிற்கு ஆஜராக வேண்டும். ஆனால் 19 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றதால் கோரம் இல்லை என்று நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாகவும் கமிஷனர் அறிவித்தார். பங்கேற்ற கவுன்சிலர் அபிராமி கூறியதாவது : நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சட்டப்படி நாங்கள் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் 33 ல் 19 பேர் மெஜாரிட்டியாக உள்ளோம். மைனாரிட்டி சேர்மன் ஆகிவிட்டார். களத்தில் நின்று வெற்றி பெற வேண்டும். கூட்டத்தில் பங்கேற்காத கவுன்சிலர்களை மக்கள் பார்த்து கொண்டு உள்ளனர் என்றார். மற்ற கவுன்சிலர்கள் உடனிருந்தனர். நகராட்சி தலைவர் வனிதா கூறுகையில், 'திசைமாறிச் சென்ற கவுன்சிலர்கள் மீண்டும் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். 33 கவுன்சிலர்களையும் எனது சகோதர சகோதரிகளாக தான் பார்க்கின்றேன். தீர்மானம் கொண்டு வந்ததற்காக நான் வருத்தப்படவில்லை. அனைவரும் இணைந்து நகரின் வளர்ச்சிக்காக பாடுபட அழைக்கின்றேன்,'என்றார். கவுன்சிலர்கள் திடீர் பல்டி : நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 16 தி.மு.க. கவுன்சிலர்களும், 6 அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கையெழுத்திட்டிருந்தனர். இதில் அ.தி.மு.க.,3 கவுன்சிலர்கள் திடீர் பல்டி அடித்துள்ளனர். இது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த கவுன்சிலர்களுக்கு பின்னடைவாக மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !