உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நகராட்சி மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு! அகற்ற மெத்தனம் காட்டுவதால் சுருங்கிய ரோடுகள்

நகராட்சி மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு! அகற்ற மெத்தனம் காட்டுவதால் சுருங்கிய ரோடுகள்

மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனுார், கம்பம், கூடலுார் நகராட்சிகளில் உள்ள பஜார் வீதிகள், கடைவீதிகளில் நாளுக்கு நாள் ஆக்கிரமித்து அதிகரிப்பதால் மக்கள் நெரிசலில் தவிக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நகராட்சி நிர்வாகம், டவுன் பிளானிங் அலுவலர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை. இதனால் நகராட்சி பகுதி நெரிசலில் தவிக்கிறது.உதாரணத்திற்கு கூடலுார் நகராட்சியின் மையப் பகுதியில் உள்ளது மெயின் பஜார். ராஜாங்கம் சிலையில் இருந்து பள்ளிவாசல் வரையுள்ள 2 கி.மீ.,தூர மெயின் பஜாரில் அனைத்து வியாபார நிறுவனங்கள், சிறுகடைகள் என அதிகம் உள்ளன. தனியார் மருத்துவமனை, ரத்தப் பரிசோதனை நிலையம், தனியார் வங்கிகள் ஆகியவை மெயின் பஜாரில் அதிகம்.30 அடி அகலத்தில் இருந்த ரோடு கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் 10 அடி ரோடாக மாறியுள்ளது. இரண்டு லாரிகள் கடந்து செல்லும் வகையில் இருந்த ரோடு தற்போது கார் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடந்து செல்ல சிரமம் ஏற்படும் வகையில் உள்ளது.சில மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றாமல் தார் ரோடு அமைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்ப தார் ரோடு சுருங்கியும் இருந்தது. வியாபார நிறுவனங்களுக்கு லாரிகளில் கொண்டு வரும் பொருட்களை இறக்க நீண்ட நேரம் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விடுகிறது.பழைய பஸ் ஸ்டாண்டில் வரைமுறையின்றி டூவீலர்களும் அதிகமாக நிறுத்துவதால் காலை மற்றும் மாலையில் பள்ளி வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் நீண்ட நேரம் தாமதம் ஆகிறது. இதற்கு ஒரே தீர்வு முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுதான் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சுருங்கும் பஜார் ரோடு

திராவிடமணி, கூடலுார்: மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கூடலுார் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அதிகம் காரணமாக அவசர நேரங்களில் பெண்கள் உள்ளிட்டோர் கடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆம்புலன்ஸ் கூட விரைவாக கடந்து செல்ல முடியாது. பழைய பஸ் ஸ்டாண்டில் பள்ளி வாகனங்கள் கலந்து செல்ல முடியவில்லை. நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும். இல்லாவிட்டால் தற்போது 10 அடியாக சுருங்கிய ரோடு 5 அடி ரோடாக மாறிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை