உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சண்முகாநதி அணையில் 6 கி.மீ., கால்வாய் மாயம் இல்லாத கால்வாயை துார்வாரிய அதிகாரிகள்

 சண்முகாநதி அணையில் 6 கி.மீ., கால்வாய் மாயம் இல்லாத கால்வாயை துார்வாரிய அதிகாரிகள்

சின்னமனூர்: சண்முகா நதி அணை கால்வாய் ஆக்கிரமிப்பால் ஆறு கி.மீ. தூர கால்வாய் காணவில்லை. இதனால் சன்முகாநதி அணை நீர் ஓடைப்பட்டி விவசாயிகளுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. ராயப்பன்பட்டி மலையடிவாரத்தில் சண்முகாநதி அணையின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது சண்முகாநதி அணை. 52.5 அடி உயரமுள்ள இந்த அணைக்கு தண்ணீர் மேகமலை பகுதியில் இருந்து கிடைக்கிறது. வடகிழக்கு பருவ மழை காலங்களில் அணை தனது முழு கொள்ளளவை எட்டும். அணை முழு கொள்ளளவை எட்டினால் 26 அடிவரையிலான தண்ணீரை பயன்படுத்த முடியும். அதற்கு கீழ் உள்ள நீரை எடுக்க முடியாது. ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி , சின்ன ஒவுலாபுரம், எரசை, கன்னிசேர்வைபட்டி, அப்பிபட்டி, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி வரை அணை நீர் 18 கி.மீ.,துார வாய்க்கால் மூலம் வழங்கப்படும். நேரடி பாசனத்திற்கு பயன்படாவிட்டாலும், கண்மாய்கள், குளங்கள், கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர பயன்படும். ஒவ்வொரு ஆண்டும் நவ., அல்லது டிச., தண்ணீர் திறக்கப்படும். விநாடிக்கு 14 . 7 கன அடி வீதம் 120 நாட்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் 1640 ஏக்கர் மறைமுக பாசன வசதி பெறுகிறது. தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைசி கிராமமான ஓடைப்பட்டி பொன்ராஜ் கவுடர் குளத்தில் சேர வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சண்முகா நதி அணை நீர் ஓடைப்பட்டிக்கு சென்றதில்லை. அணையில் இருந்து திறக்கப்படும் நீர் ஓடைப்பட்டிக்கு 6 கி.மீ. முன்பே துண்டிக்கப்பட்டு விட்டது. இந்த 6 கி.மீ. வாய்க்கால் பெரும் பகுதி ஆக்கிரமித்து தோட்டங்களாக மாறியுள்ளது. பெரும் பகுதிகள் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டிய வாய்க்காலாக உருமாறி விட்டது. இதனால் கடைமடை ஓடைப்பட்டி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு கி.மீ., வாய்க்கால் ஆக்கிரமிப்பு ஆனால் இன்று வரை நீர்வளத் துறை ஆவணங்களில் ஓடைப்பட்டி வரை தண்ணீர் சப்ளை செய்வதாக கணக்கு காட்டுகின்றனர். அதை விட கொடுமை என்னவென்றால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த வாய்க்கால் தூர் வாரும் பணிகள் நடைபெற்றது. அப்போதும் 18 கி.மீ. தூர வாய்க்கால் தூர்வாரப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 12 கி.மீ. மட்டுமே கண் துடைப்பாக பணிகள் நடந்தது. ஆறு கி.மீ. வாய்க்காலை காணவில்லை என்பதுதான் வேடிக்கை. அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகள் எப்படி வாழ்வது மகாலிங்கம், விவசாயி, ஓடைப்பட்டி : சண்முகாநதி அணை வாய்க்கால் எரசக்கநாயக்கனுார் உடன் நின்று விடுகிறது. அங்குள்ள நாயக்கன்குளத்துடன் தண்ணீர் நின்று விடுகிறது. அங்கிருந்து ஓடைப்பட்டிக்கு வரும் வாய்க்காலை காணவில்லை. பொன்ராஜ்கவுடர் குளம் தான் கடைசியாக வாய்க்கால் தண்ணீர் வர வேண்டும் . ஆனால் ஓடைப்பட்டிக்கு சண்முகா நதி அணை தண்ணீர் வந்து 10 ஆண்டுகளாகி விட்டது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் முல்லைப்பெரியாறு கரையில் பட்டா நிலத்தில் போர் அமைத்து பல கி.மீ. தூரத்திற்கு பைப் லைன் அமைத்து தண்ணீர் கொண்டு வந்தால், அந்த பைப் லைனையும் அதிகாரிகள் உடைக்கின்றனர். விவசாயிகள் எப்படி தான் வாழ்வது .எங்கள் கிராமத்திற்கு சண்முகா நதி அணை தண்ணீர் கிடைக்க, வாய்க்காலை மீட்க வேண்டும். தண்ணீருக்கு போராடும் விவசாயிகள் சோணை ராஜா, விவசாயி, ஓடைப்பட்டி : ஆரம்பத்தில் சண்முகா நதி அணை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. 6 கி.மீ. தூரத்திற்கு வாய்க்காலை காணவில்லை -இதற்கு அதிகாரிகள் தான் காரணம். வாய்க்கால் பராமரிக்காததால் புதராக மாறியது இதில் தண்ணீர் செல்லவழியில்லாமல் தேங்கி பக்கவாட்டில் உடைப்பு ஏற்பட்டு தோட்டங்களுக்குள் சென்றது. வாய்க்கால் தண்ணீர் கிடைக்காததால், ஒடைப்பட்டிபகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றது. ஓடைப்பட்டி விவசாயிகள் தண்ணீருக்காக போராடி வருகின்றனர். வாய்க்காலை மீட்டெடுத்து ஓடைப்பட்டிக்குசண் முகாநதி அணை தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும். வாய்க்காலை மீட்ப தே தீர்வு தீர்வு : இந்த பிரச்னையில் முதலில் நீர்வளத்துறை, வருவாய்த்துறை, விவசாயிகள் அடங்கிய குழுவினர் அமர்ந்து - பேசி ஆறு கி.மீ. வாய்க்காலை மீட்க ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் வாய்க்காலை 18 கி.மீ. தூரத்திற்கும் தூர்வாரி, பக்கவாட்டு கரையில் சிலாப் பதிக்க வேண்டும். அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது முறை வைத்து சுழற்சி முறையில் வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை