உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாட்டுபட்டி அணை திறக்கப்பட்டு ஒன்றரை மாதமாக வீணாகும் தண்ணீர் வழக்கமான செயல் என அதிகாரிகள் அலட்சியம்

மாட்டுபட்டி அணை திறக்கப்பட்டு ஒன்றரை மாதமாக வீணாகும் தண்ணீர் வழக்கமான செயல் என அதிகாரிகள் அலட்சியம்

மூணாறு : மாட்டுபட்டி அணை திறக்கப்பட்டு ஒன்றரை மாதத்திற்கு மேலாக தண்ணீர் வீணாகி வரும் நிலையில், வழக்கமான செயல் என அதிகாரிகள் மழுப்பலாக பதிலளித்து அலட்சியம் காட்டுவது தொடர்கிறது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு கட்டப்பட்டவையாகும். அதன்படி மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை தண்ணீர் பள்ளிவாசல் நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப் படுகிறது. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் பழைய மூணாறில் உள்ள ஹெட் ஒர்ஸ் தடுப்பணையில் தேக்கப்பட்டு சுரங்கம், ராட்சத குழாய் ஆகியவற்றின் மூலம் நீர் மின்நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. தடுப்பணை பராமரிப்பு பணிகளுக்காக செப்.10ல் திறக்கப்பட்டது. நீர் திறப்பு மாட்டுபட்டி அணை நிரம்பியதால் (உயரம் 273.5 அடி) நீர் மட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை 28 முதல் 2 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குண்டளை அணை செப்.12ல் திறக்கப்பட்டு, அந்த தண்ணீர் மாட்டுபட்டி அணையில் தேங்கி வருகிறது. தவிர மாட்டுபட்டி அணையில் 2 மெகாவாட் மின் உற்பத்தியும் கடந்த 2 மாதங்களாக முடங்கியது. இது போன்ற காரணங்களால் மாட்டுபட்டி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக வீணாகி வருகிறது. இது அணையின் நீர் மட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வழக்கமான செயல் என அதிகாரிகள் அலட்சியமாக தெரிவிக்கின்றனர். அதேசமயம் அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறும் ரம்மியமான தோற்றத்தை சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி