உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்மாய் ஷட்டர்கள் பழுதால் நீர்வெளியேறி வீணாகும் அவலம் போடி பங்காருசாமி நாயக்கர் கண்மாய் விவசாயிகள் சிரமம்

கண்மாய் ஷட்டர்கள் பழுதால் நீர்வெளியேறி வீணாகும் அவலம் போடி பங்காருசாமி நாயக்கர் கண்மாய் விவசாயிகள் சிரமம்

போடி: போடி அருகே பங்காருசாமி நாயக்கர் கண்மாய் முட்செடிகள் ஆக்கிரமிப்பு, ஷட்டர்கள் பழுதால் தேங்கியுள்ள தண்ணீர் வீணாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.போடி தேனி செல்லும் மெயின் ரோட்டில் 107 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பங்காருசாமி நாயக்கர் கண்மாய். குரங்கணி கொட்டகுடி பகுதியில் பெய்யும் மழை நீர் அணைப்பிள்ளையார் அணை ஆற்று வழியாக இக்கண்மாய்க்கு் வருகிறது. கண்மாய் நிரம்பியதும் அருகே உள்ள மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய், சங்கரப்பன் கண்மாய்க்கு சென்றடையும். பங்காருசாமி கண்மாயில் தண்ணீர் தேங்குவதன் தண்ணீர் மூலம் 1300 ஏக்கர் நேரடியாகவும், 400 ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. கண்மாய் முழுவதும் மூட்செடிகள், ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் கொட்டகுடி ஆற்றில் இருந்து வரும் நீரை முழுவதும் சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. விவசாயிகள் கூறியதாவது:

சேதமடைந்த ஷட்டர்கள்

வாசுகன், விவசாயி, போடி : இக்கண்மாயில் நீர் நிரம்புவதன் மூலம் அணைக்கரைப்பட்டி, மீனாவிலக்கு, தோப்புப்பட்டி, பொட்டல்களம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். சமீபத்தில் பெய்த மழையால் கண்மாய் முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது. கண்மாயின் தெற்கு, வடக்கு மடைகளின் ஷட்டர் சேதமடைந்து பல ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் கண்மாயில் தேங்கியுள்ள நீரில் 40 சதவீதம் வீணாக வெளியேறுகிறது. வெயில் காலத்தில் நீரின் அளவு குறைந்து விடுகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு மடை ஷட்டரை சீரமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் சீரமைக்காமல் வேறு பணிகளுக்கு நிதி பயன் படுத்தப்பட்டன. வடக்கு பகுதி ஷட்டர் சேதமடைந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் கண்மாயில் மழை நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் நீர் வீணாக வெளியேறி வருகிறது. தெற்கு பகுதி ஷட்டரில் வீணாகும் நீரானது அருகில் உள்ள நிலங்களுக்குள் சென்று பாதிப்பு ஏற்படுத்துகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க விவசாயிகள் சொந்த செலவில் மணல் மூடைகளை அடுக்கி ஓரளவுக்கு நீரை தேக்கி வருகின்றோம்.

பாதை சீரமைக்க வேண்டும்

செந்தில்குமார், விவசாயி, பி.அணைக்கரைப்பட்டி : கண்மாய்க்கு நீர் வரத்து பாதையான கொட்டகுடி ஆறு, ராஜவாய்க்கால் இருபுறமும் ஆக்கிரமிப்பால் பாதை குறுகி உள்ளது. இதனால் நீர்வரத்து குறைந்து மழை நீரை முழுவதும் சேமிக்க முடியவில்லை. முட்செடிகள் மரங்களாகி அதன் வேர்கள் ஷட்டர் தடுப்புகளை சேதப்படுத்துகின்றன. கண்மாயை நம்பி சுற்றி 150 ஏக்கர் விவசாயம் நடக்கிறது. கண்மாய் கரை பலமின்றியும், பல இடங்களில் கருங்கற்களால் ஆன தடுப்பு சுவர் இல்லை. இப்பகுதி விவசாயிகள் கண்மாய் கரை பாதை வழியாக விளை பொருட்களை கொண்டு வர வேண்டும். வேறு மாற்று பாதை இல்லை. பாதை வசதி இருந்தும் முட்செடிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. மழைக் காலங்களில் இப்பாதையில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு சகதியாக மாறி விடுகிறது. இதனால் விளை பொருட்களை ஆட்டோ, டிராக்டரில் கொண்டு வரவும், தளவாட பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தலைச்சுமையாக கொண்டு வரும் நிலை உள்ளது. விவசாயிகள் பயன் பெறும் வகையில் கண்மாய் கரையை மேம்படுத்துவதோடு, மெட்டல் ரோடு வசதி அமைத்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை