கூடலுார் பஸ் ஸ்டாண்டில் மழையில் நனைந்து பயணிகள் அவதி நிழற்குடை இருந்தும் பயன்படுத்த முடியாத அவலம்
கூடலுார்: கூடலுார் பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை வசதிகள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் பயணிகள் மழையில் நனைந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கூடலுார் பஸ் ஸ்டாண்ட் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு பிப்.15ல் பயன்பாட்டிற்கு வந்தது. பயணிகள் நிழற்குடை, கடைகள், ஓய்வறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, தாய்மார்கள் பாலுாட்டும் அறை என அனைத்து வசதிகளுடன் உள்ளது. அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்கிறது. பஸ் ஸ்டாண்டிற்குள் இருக்கும் 10 கடைகள் பயன்படுத்தாமல் பூட்டியே கிடக்கின்றன. மேலும் பயணிகள் அமருவதற்கு கொண்டுவரப்பட்ட இரும்புச் சேர்கள் பயன்பாடின்றி அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா காணப்பட்டு 5 மாதங்களுக்கு மேலாகியும் முழுமையான பயன்பாட்டிற்கு இதுவரை கொண்டு வரப்படவில்லை. இதனால் பஸ்கள் நிறுத்துமிடத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் அனைத்து பஸ்களும் நிழற்குடை உள்ள இடத்தில் நிறுத்த முடியாமல் எதிர் திசையில் நிறுத்தப்படுகிறது. அப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நனைந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் விரைவில் பஸ் ஸ்டாண்டை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பஸ்கள் அனைத்தையும் நிழற்குடை உள்ள இடத்தில் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.