அனுமந்தன்பட்டி, கோகிலாபுரத்தில் பயணிகள் நிழற்குடை இன்றி அவதி
உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டி , கோகிலாபுரத்தில் பயணியர் நிழற்குடை இன்றி பயணிகள் அவதிப்படுகின்றனர்.அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. காக்கில் சிக்கையன் பட்டி, கோவிந்தன்பட்டி போன்ற உட்கடை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் 15 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். மேலும் இப்பகுதி திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த பேரூராட்சியில் குடியிருப்புகள் ரோட்டிற்கு மேற்கு பக்கம் உள்ளன. எனவே வெளியூர்களுக்கு பஸ்சில் பயணிக்க வரும் பயணிகள் அனைவரும் மெயின் ரோட்டில் உள்ள பயணிகள் நிழற்குடையில் நின்று, ஏறி சென்று வந்தனர். இரு வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மாற்றிய போது, பஸ் நிறுத்த நிழற்குடைகள் அகற்றப்பட்டு புதிய நிழற்குடைகள் அமைக்கப்பட்டன. புதுப்பட்டி, கோவிந்தன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அனுமந்தன்பட்டியில் 4 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட நிழற்குடைக்கு மாற்றாக புதிய நிழற்குடை இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் பஸ் ஏற வரும் பொது மக்கள் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதே போன்று கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் பயணியர் நிழற்குடை இல்லாத அவல நிலை உள்ளது. இந்த ஊர்களில் பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.